நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கம் சார்பில், தத்தெடுக்கப்பட்ட புத்தேரி ஆனைபொத்தை கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட படிப்பகம் மற்றும் இரவு பாடசாலை தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ரோட்டேரியன் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தொடங்கி வைத்தார். ஊர்த்தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நூலகக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதுடன், அலமாரி, மேசை, நாற்காலிகள் மற்றும் புத்தகங்கள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன.
கிராமப்புறக் குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்தவும், பள்ளிப் பாடங்களைச் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும், வீட்டில் படிப்பதற்கான சூழல் இல்லாத மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பியிற்சிகள் வழங்கவும் இரவு பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது. பாடநூல் கல்வியுடன் வாசிப்புப் பழக்கம், பொது அறிவு மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் படிப்பகமும் நூலகமும் முக்கியப் பங்கு வகிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்யும் நோக்கில், தவப்புதல்வி நிறுவனரும் ரோட்டேரியனுமான பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரையின் உந்துதலில் , ஊர்த்தலைவர் மகேஷ் அவர்களின் செயலாற்றலில் ரோட்டரி சங்கம் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்து, எதிர்கால இலக்குகளை அடைய வழிவகுக்கும். இந்நிகிழ்வில் ஆனைப்பொத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .






