எடுத்தார் பாலாஜி... கொடுத்தார் உதயகுமார்..! - விறுவிறுக்கும் விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியல்

விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் தன்னைத் தவிர வேறு முக்கிய தலைகள் யாரும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உஷாராக இருப்பதாக அதிமுக-வினர் அடிக்கடி சொல்வார்கள். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கேடிஆர்.எம்ஜிஆரின் முரட்டு பக்தர் என்று சொல்லப்பட்ட தாமரைக்கனி, 1991 ராஜிவ் அலையிலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் சுயேச்சையாக நின்று வென்றவர்.
அதேபோல் 1996-ல், அதிமுக-வுக்கு கிடைத்த நான்கு எம்எல்ஏ-க்களில் தாமரைக்கனியும் ஒருவர். அந்தளவுக்கு விருதுநகர் மாவட்ட அரசியலில் தனக்கென இரு இடத்தை தக்கவைத்திருந்தவர் தாமரைக்கனி. அப்படிப்பட்டவருக்கு 2001 தேர்தலில் ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகன் இன்பத்தமிழனை ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தி, சுயேச்சையாக போட்டியிட்ட தாமரைக்கனியை தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து இன்பத்தமிழனை அமைச்சராகவும், விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் ஆக்கினார் ஜெயலலிதா.
2005-ல் தாமரைக்கனி காலமானார். அப்போது தலைவிக்குப் பயந்து கொண்டு தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ளாமல் இருந்தார் இன்பத்தமிழன். கடைசி நேரத்தில் தலைமையின் அனுமதி கிடைத்த பிறகே மயானக்கரைக்குச் சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். ஆனால், தந்தையைவிட தலைவி தான் முக்கியம் என நினைத்துக் கொண்டிருந்த இன்பத்தமிழனையும் 2006 தேர்தலில் ஓரங்கட்டினார் ஜெயலலிதா. இதனால், வாக்குப் பதிவுக்கு முன்னதாக அவரை அழகிரி தரப்பு திமுக-வுக்கு தள்ளிக்கொண்டு போனது.
ஆனால், தாமரைக்கனியின் மகனால் திமுக-வில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் வெகு சீக்கிரத்திலேயே மீண்டும் அதிமுக-வுக்கு யுடர்ன் அடித்தார் இன்பத்தமிழன். இதனிடையே, தொகுதி சீரமைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனித் தொகுதியாக மாறிப் போனதால் 2011-ல் இன்பத்தமிழனுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனது. அந்தத் தேர்தலில் சிவகாசியில் வெற்றிபெற்ற கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சர், மாவட்டச் செயலாளர் என அடுத்தடுத்து பதவிக்கு வந்தார்.
ராஜேந்திர பாலாஜி மாவட்டச் செயலாளர் ஆன பிறகு, முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தந்திரமாக காய்நகர்த்தி அவர்களை ஓரங்கட்டினார். லேட்டஸ்டாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராகவும் கர்ஜிக்க ஆரம்பித்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் நிழலில் தஞ்சமடைந்த இன்பத்தமிழன் அமமுக-வுக்கு மாவட்டச் செயலாளர் ஆனார். ஆனால், அங்கேயும் காலம் தள்ளமுடியாமல் மீண்டும் அதிமுக-வுக்கே திரும்பியவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இப்போது அவரை நகரச்செயலாளர் பதவியிலிருந்து நைஸாக கழட்டிவிட்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. இன்பத்தமிழனுக்கு எதிராக இப்படியொரு மூவ் நடப்பது தெரிந்ததும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளராக இருக்கும் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடியாரிடம் பேசி இன்பத்தமிழனை பேரவையின் மாநில இணைச் செயலாளராக நியமிக்க வைத்திருக்கிறார்.
ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், லோக்கல் அரசியலில் ராஜேந்திர பாலாஜியால் ஓரங்கட்டப்பட்ட இன்பத்தமிழனுக்கு மாநில அளவில் பொறுப்புக் கொடுத்து அரவணைத்திருக்கிறார் உதயகுமார். இதற்காக இன்பத்தமிழனுக்கு வாழ்த்துத் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வைத்திருக்கும் ஃபிளெக்ஸ்களில் எல்லாம் ராஜேந்திர பாலாஜியின் படம் மிஸ்ஸாகி அதற்குப் பதிலாக ஆர்.பி.உதயகுமார் அட்டகாசமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இன்பத்தமிழன் ஆதரவாளர்கள், “இன்பத்தமிழன் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்தபோது திருத்தங்கல் நகராட்சி துணை தலைவராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆனால், சூழ்நிலைகள் மாறி அவர் அமைச்சர் ஆனதும் ஆர்.பி.உதயகுமார், இன்பத்தமிழன், வைகைச்செல்வன் உள்ளிட்ட சீனியர்களை வரிசையாக ஓரங்கட்டினார்.
2011-க்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக-வின் செல்வாக்கு சரிந்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். 2024 மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து இபிஎஸ் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில், ‘மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் செலவுக்கு பணம் தரவில்லை’ என அனைத்து நிர்வாகிகளையும் வைத்துக் கொண்டு உண்மையைச் சொன்னார் இன்பத்தமிழன்.
இதை ராஜேந்திர பாலாஜியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அப்போதிருந்தே, இன்பத்தமிழனை நகரச் செயலாளர் பதவியில் இருந்து தூக்குவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, இப்போது அவரை மட்டுமில்லாது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 250 பேரின் பொறுப்புகளையும் பறித்துள்ளார். இதற்கான பலனை தேர்தலில் அவர் அறுவடை செய்வார்” என்றனர்.
இதுகுறித்து இன்பத்தமிழனிடம் கேட்டதற்கு, “ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்ற ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தார். இப்போது நகரச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஜெ பேரவை மாநில இணைச் செயலாளராக இபிஎஸ் என்னை நியமித்துள்ளார். இதன் மூலமாக விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பொதுச் செயலாளருடன் சுற்றுப்பயணம் செய்து அதிமுக வெற்றிக்குப் பாடுபடுவேன்” என்றார்.
ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், மாஃபா பாண்டியராஜன் இவர்களோடு தடாலடி அரசியலுக்கு பேர் போன இன்பத்தமிழனையும் சேர்த்துவிட்டு தனது அரசியல் எதிரிகள் வட்டாரத்தை மேலும் விரிவுபடுத்தி இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்