2025அஜித்குமார் வழக்கில் நிகிதா அளித்த புகார் மீதான எஃப்.ஐ.ஆர் வெளியானது - என்ன இருக்கிறது?

திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் வழக்கில், அஜித்குமார் மீது பேராசிரியர் நிகிதா அளித்த புகார் மீதான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது:
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலுக்கு தனது தாயாருடன் காரில் வந்தபோது அதில் வைத்திருந்த நகை திருடுபோனதாக நிகிதா புகார் அளித்துள்ளார்.
“காரை நான் நிறுத்தி வருகிறேன் என என்னிடம் வற்புறுத்தி அஜித்குமார் சாவியை கேட்டார்” என நிகிதா புகார் அளித்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா, செய்தியாளர்களிடம் பேசியபோது, தனது தாயாருக்கு வீல்சேர் வழங்க ரூ.500 கேட்டு அஜித் வாக்குவாதம் செய்தார் எனக் கூறியிருந்தார்
திருப்புவனம் போலீசில் ஜூன் 27இல் நிகிதா புகார் அளித்து, ஜூன் 28ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்னரே, அஜித்குமாரை சிறப்புப்படை போலீசார் அழைத்துச் சென்றது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்தே, சிறப்புப் படையை அனுப்பிய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆனால், ஜூன் 28இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த திருப்புவனம் போலீசார், அஜித்தை மானாமதுரை டிஎஸ்பியின் சிறப்புப்படை விசாரித்ததை அறிக்கையில் குறிப்பிடவில்லை.