விஜய் அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா?’ – விசிக தலைவர் திருமாவளவன்

விஜய் அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா?’ – விசிக தலைவர் திருமாவளவன்

பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிய வாய்ப்பே இல்லை எனவும், தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்திப்பார்கள் எனவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “அஜித் குமார் கொலை விவகாரத்தில் முதல்வர் உடனடியாகத் தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்துத்துள்ளார். அவரின் தாயாரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளார். இது சற்று ஆறுதல் தருகிறது. இருந்த போதும் இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என அரசியல் அணுகுமுறைகளையே கையாள்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும், பாமகவில் நடக்கும் உட்கட்சிப் பூசல் குறித்துப் பேசிய அவர், “பா.ம.க இரண்டாகப் பிரிய வாய்ப்பில்லை. தந்தையும் மகனும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பார்கள்” எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

திமுக, பா.ஜ.க வை கொள்கை எதிரி என விஜய் கூறுவது குறித்துப் பேசிய திருமாவளவன், அதிமுக-வை பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாதது ஏன் என்கிற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார். “ஒருவேளை விஜய் அதிமுக-வை தோழமைக் கட்சியாகப் பார்க்கிறாரா” என்ற கேள்வி எழுவதாகவும் அதற்கு விஜய்தான் பதிலளிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.