ஊட்டச்சத்துகள் நிறைந்த கருவாட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து - குழந்தைகள் சாப்பிடலாமா?

கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது.
தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன.
உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. புதிதாகப் பிடித்த மீனைவிட நீண்ட காலம் பாதுகாக்கப்படக் கூடிய கருவாடு எனப்படும் உணவு வகை கடலோர மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் நம் உடல்நலத்தைக் காக்கும் ஒரு 'சூப்பர் ஃபுட்' ஆகவும் இது கருதப்படுகிறது. கருவாட்டில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் சிறிய அளவில் உட்கொண்டாலே நமக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்...
ஆனால், கருவாட்டின் ஊட்டச்சத்து முக்கியத்துவம், உணவுப் பாதுகாப்பில் அதன் பங்கு, சிறிய மீன்களின் சிறப்புகள், மருத்துவர்களின் எச்சரிக்கைகள், நவீன தீர்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்...
நூறு கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது
தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறையில், கருவாடு பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. கருவாட்டுக் குழம்பு, கருவாட்டுப் பொடி சாம்பார், கருவாட்டு வறுவல் போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிரபலமான உணவு வகைகள். குறிப்பாக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கருவாடு அன்றாட உணவில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
கருவாடு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த உணவு. 100 கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது. இது இறைச்சி, முட்டையைவிட அதிகமான அளவு. இந்த மேம்பட்ட புரதம் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இது எளிதில் செரிமானமாகி, தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
சிறிய மீன்களான நெத்திலி, கெளுத்தி, பாறை போன்றவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இவை எலும்புகளின் வலிமைக்கும், ரத்த சோகையைத் தடுப்பதற்கும் அவசியம்.
சிறிய மீன்களின் முழு உடலையும் (எலும்புகள் உள்பட) உண்ண முடியும் என்பதால், இவை பெரிய மீன்களைவிட 2-3 மடங்கு அதிக கால்சியம், 5-10 மடங்கு அதிக இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது குறிப்பாக வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு.
மேலும், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் டி எலும்புகளின் வலிமைக்கு அவசியமானது. வைட்டமின் ஏ கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.
வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் அவசியம். துத்தநாகம், செலீனியம் போன்ற தாது உப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) சமீபத்திய ஆய்வுகளும், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடுகளில் கருவாட்டைப் பயன்படுத்தி அதைக் குறைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
கருவாட்டை எவ்வாறு பாதுகாப்பான முறையில் உணவுத் திட்டங்களில் ஒருங்கிணைக்கலாம் என்பதற்கான நடைமுறைப் பரிந்துரைகளையும் அந்த அமைப்பு வழங்குகிறது..
உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகளில், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலைச் சமாளிக்க சிறிய மீன்கள் ஒரு முக்கியத் தீர்வாக மாறியுள்ளன.
சிறிய மீன்கள் விலை குறைவாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவற்றை 'ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார்ஸ்' என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அழைக்கிறது. வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகளில் சிறிய மீன்கள் உள்ளூர் மக்களின் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
இந்தியாவில் ஒடிசா மாநிலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS ) திட்டத்தில் சிறுமீன் கருவாட்டை குழந்தைகளின் உணவில் சேர்த்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கருவாடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மீன் வகைகளும் முக்கியமானவை. நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்றவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு மீன் வகையும் தனித்துவமான ஊட்டச்சத்துச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நெத்திலி, கால்சியம் அதிகம் கொண்டது. கெளுத்தி, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டது. பாறை புரதத்தை அதிக அளவில் கொண்டது