மெக்னீசியம் சத்து நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம்? எந்தெந்த உணவுகளில் அது இருக்கிறது?

சமீப காலமாக சமூக ஊடகங்களில் மெக்னீசியம் ஒரு பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.
சமூக ஊடகங்களில் மெக்னீசியம் தொடர்பான பதிவுகளும் சமீபத்தில் அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் #மெக்னீசியம் (#Magnesium) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவிடுகிறார்கள்.
ஆனால், கேள்வி என்னவென்றால், மெக்னீசியம் உங்கள் உடல்நலத்துக்கு எவ்வளவு முக்கியமானது?
நீங்கள் போதுமான அளவு மெக்னீசியம் எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? என்பது தான்.
நமது அன்றாட உணவில் காணப்படும் ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்தான மெக்னீசியம், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
நமது செல்கள், உறுப்புகள் மற்றும் மூளை சரியாக செயல்படுவதை, மெக்னீசியம் உறுதி செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மனநிலையை சமன்படுத்தவும், தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் மெக்னீசியம் உதவுகிறது.
கூடுதலாக, உடலில் வைட்டமின் டி உறிஞ்சப்படுவதிலும், அதன் செயல்பாடுகள் சரியாக நடைபெறுவதிலும் மெக்னீசியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எந்தெந்த உணவுகளில் மெக்னீசியம் காணப்படுகிறது?
பச்சை இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. ஏனெனில், தாவரங்களுக்கு பச்சை நிறத்தை தரும் குளோரோஃபிலில் மெக்னீசியம் காணப்படும் .
சுத்திகரிக்கப்படாத தானியங்கள், பருப்புகள், மற்றும் விதைகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இதுதவிர, சில மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்களிலும் மெக்னீசியம் குறைந்த அளவில் காணப்படுகிறது.
பிரேசில் முந்திரி, ஓட்ஸ் தவிடு, பழுப்பு அரிசி (நடுத்தர வகை), முந்திரி, கீரை மற்றும் பாதாம் போன்ற உணவுகளில் மெக்னீசியம் போதுமான அளவில் உள்ளது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மற்றொரு ஆய்வு சியா விதைகளிலும், பூசணி விதைகளிலும் மெக்னீசியம் உள்ளது என்று கூறுகிறது.
"நீங்கள் தினமும் உப்பு சேர்க்காத முழு தானியங்களை சாப்பிட்டு, பல்வேறு வகையான பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்தால், தினசரி உங்களுக்குத் தேவையான மெக்னீசியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்கிறார் பிரிட்டிஷ் உணவுமுறை சங்கத்தின் ஆலோசகர் உணவியல் நிபுணரும் செய்தித் தொடர்பாளருமான ரெபேக்கா மெக்மனமோன்.