மீன் முள்ளை விழுங்குவது ஆபத்தா? தொண்டை அல்லது வயிற்றுக்குள் சிக்கினால் என்ன ஆகும்?

மாமிச உணவு பிரியர்களுக்கு மீன் என்றால் அலாதி பிரியம். அதில் கடல் மீன் மற்றும் நன்னீர் மீன் எனப் பல வகைகள் உள்ளன.
சமீப காலங்களாகப் பலரும் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை விட மீனில் கொழுப்பு குறைவாக இருக்கிறது எனக் கூறி மீனை அதிகமாக உண்ணத் தொடங்கியுள்ளனர். ஆனால் பிரச்னை என்பது மீன் முட்களில் தான் உள்ளது.
மீன் சாப்பிட எவ்வளவு தான் ஆசை இருந்தாலும், அதில் முட்கள் இருக்கும் என்கிற அச்சத்தால் தான் பலரும் மீன்களைச் சாப்பிட இருமுறை யோசிக்கின்றனர்.
சாப்பிடும் போது ஒரு சிறிய மீன் முள் தொண்டை வழியாக வயிற்றுக்குச் சென்றால் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் அந்த சிறிய முள் தொண்டையில் சிக்கிக் கொண்டாலோ அல்லது ஒரு பெரிய முள் வயிற்றுக்குள் சென்றாலோ அது சிக்கலில் முடியக்கூடும்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிக்காவோலுவைச் சேர்ந்த 54 வயதான ஜம்பா மங்கம்மா சமீபத்தில் மீன் குழம்பு சாப்பிட்டுள்ளார். அதில் மீன் முள் ஒன்று இதயத்திற்கு அருகே உணவுக் குழாயில் சிக்கியது.
அதிக வலி ஏற்பட்டதால் காக்கிநாடாவில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அங்கே பல பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள் மீன் முள், அவரது இதயத்திற்கு அருகே சிக்கியுள்ளதைக் கண்டுபிடித்தனர்.
அவரது மார்பு எலும்புகளைப் பாதிக்காதவாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் இதயம் அருகே சிக்கியிருந்த மீன் முள்ளை ட்ராவேர் என்கிற செயல்முறையைப் பயன்படுத்தி நீக்கியதாக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் சிவராமகிருஷ்ணா, நாகேஸ்வர ராவ், வம்சி சைதன்யா ஆகியோர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.