ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது கையில் சாவியை கொடுப்பது சரியா? அறிவியல் உண்மை என்ன?

ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது கையில் சாவியை கொடுப்பது சரியா? அறிவியல் உண்மை என்ன?
2013இல் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தின் ஒரு காட்சி

ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென யாரிடமாவது கேட்டால், 'கையில் சாவி அல்லது இரும்பைக் கொடுங்கள்' என்பதே உடனடி பதிலாக இருக்கும். பல திரைப்படங்களில் நாம் அந்தக் காட்சியை பார்த்திருப்போம்.

அதேபோல, ஒருவரை பாம்பு கடித்தால் உடனடியாக பாம்பு கடித்த இடத்திற்கு அருகில் கயிறால் இறுக்கிக் கட்டி, நஞ்சை வாயால் உறிஞ்சி எடுத்து, துப்புவது. ஒருவரை மயக்கமடையச் செய்ய வேண்டுமென்றால் கட்டையால் பின்னந்தலையில் அடிப்பது அல்லது கைக்குட்டையில் குளோரோஃபார்ம் ஊற்றி, முகத்தில் வைத்து அமுக்குவது, இப்படி பல காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் உண்மை என்ன? நிபுணர்கள் கூறுவது என்ன?

வலிப்பு ஏற்பட்டால் இரும்புப் பொருளைக் கொடுக்க வேண்டுமா?

ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் இரும்புப் பொருள் அல்லது சாவிக்கொத்தை கொடுப்பது மிகவும் தவறான செயல் எனக் கூறுகிறார், பொது மருத்துவர் அஷ்வின் கருப்பன்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர், "வலிப்பு ஏற்படும் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், கை, கால்களை வேகமாக அசைப்பார்கள் எனும்போது, இரும்பு அல்லது சாவிக்கொத்து கொடுத்தால், அதைக் கொண்டு அவர்கள் தங்களைக் காயப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது." என்று கூறுகிறார்.