உலகில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? யாரிடம் அதிகமாக உள்ளது?

உலகில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? யாரிடம் அதிகமாக உள்ளது?
இரண்டாம் உலகப் போரின்போது, ​​அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா (இடது) மற்றும் நாகசாகி (வலது) மீது பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுகுண்டுகளை வீசியது

அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இரானின் அணுசக்தித் திட்டம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுவதற்குக் காரணமாக உள்ளது.

ஜூலை 2 அன்று, இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) இரான் ஒத்துழைப்பை இடைநிறுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார். இஸ்ரேலும் அமெரிக்காவும் ஜூன் மாதத்தில் இரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கியதற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க இந்தத் தாக்குதல்கள் அவசியம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறியுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தின என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், இந்தத் தாக்குதல்களின் விளைவுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும், அணு ஆயுத பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்ட ஐ.நா.வின் பரவல் தடை ஒப்பந்தத்திற்கும் (NPT) என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பதும் இன்னும் புரியவில்லை.

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தம், அணு ஆயுதங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது.