கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியபோது. ஓர் அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி வர்மாவின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதுதொடர்பாக விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா 3 நீதிபதிகள் கொண்ட உள் விசாரணைக் குழுவை அமைத்தார்.
இதற்கிடையில், நீதிபதி வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.
அவர் வாதிடும்போது, “அரசியலமைப்பு சட்டத்தின் 124-வது பிரிவின்படி மட்டுமே ஒரு நீதிபதியை பதவியிலிருந்து நீக்க முடியும். 3 நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பொது விவாதங்கள் மூலம் நீதிபதியை பதவிநீக்க முடியாது. மேலும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உள் விசாரணை குழு உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “அப்படியானால் விசாரணைக் குழுவின் முன் நீங்கள் (நீதிபதி யஷ்வந்த் வர்மா) ஏன் ஆஜரானீர்கள்? வீடியோவை நீக்குவதற்காக நீதிமன்றத்துக்கு வந்தீர்களா? விசாரணை முடிந்து அறிக்கை வெளியிடப்படும் வரை ஏன் காத்திருந்தீர்கள்? முதலில் அங்கிருந்து சாதகமான உத்தரவை பெறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டீர்களா? குழு நியமிக்கப்பட்ட போதே அதை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை” என்று கேள்விகளை அடுக்கினர்.
இதைத் தொடர்ந்து 3 நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கபில் சிபலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனது மனுவில் தன்னுடைய பெயரையோ, அடையாளத்தையோ குறிப்பிடாதது ஏன் என்பது தொடர்பாக நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மாசி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
உச்ச நீதிமன்றத்தின் வழக்கு பட்டியலில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த இந்த வழக்கின் பெயர் XXX vs மத்திய அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா, தனது மனுவில் அடையாளத்தை வெளியிடாமல் இருக்க அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
பொதுவாக பாலியல் வழக்கிலோ அல்லது சிறுவர்கள் தொடர்பான வழக்கிலோ அவர்கள் அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக இதுபோன்ற முறை பின்பற்றப்படும். ஆனால் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் XXX என்று குறிப்பிடப்பட்டுள்ளது.