கிருஷ்ணகிரி | அடுத்தடுத்து 8 வாகனங்கள் விபத்து: தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 8 வாகனங்கள் விபத்துக்கு உள்ளானதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓசூரில் இருந்து மைதா மாவு மூட்டைகளை ஏற்றிய லாரி கிருஷ்ணகிரிக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற கார் மீது மோதியது. மேலும், விபத்தில் சிக்கிய கார், முன்னால் சென்ற கார், அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 3 லாரிகள், அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பர்கூர் தபால்மேடு அன்வர் (32), அவரது மகன் அசிம் (7) மற்றும் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உள்ளிட்ட 3 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து காரணமாக கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்