வேலைக்காரி

வேலைக்காரி
வேலைக்காரி

புனிதம் அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. தினமும் காலை மாலை வீட்டைக் கூட்டிப் பெருக்குதல், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மாப் போட்டுத் துடைத்தல் இவைதான் அந்த வேலைகள்! இதே வேலைகளை மேலும் சில வீடுகளில் பார்ப்பதால் அவற்றுக்கு மேல் வேறு வேலைகள் பார்க்க நேரம் கிடையாது அவளுக்கு. ஆனால் மிகவும் சென்ஸிடிவ் டைப்! தன்மானத்தை சீ்ண்டும் போது வெகுண்டெழுவாள். அவள் செய்கின்ற வேலையில் குற்றம் காணமுடியாது. அத்தனை சுத்தமாக இருக்கும். கையும் சுத்தம்! 

அன்று காலை குனிந்தபடி ஹாலைப் பெருக்கும்போது எதேச்சையாக புனிதத்தின் பார்வை சோஃபா அடியில் செல்ல திடுக்கிடுட்டாள். ஒரு 500 ரூபாய் நோட்டு காணப்பட்டது. அதைக் கையில் எடுத்தாள். “அம்மா..” குரல் கொடுக்க, அடுக்களையில் வேலையாக இருந்த சுந்தரி வெளிப்பட்டாள். “என்ன புனிதம்?”

“இந்த நோட்டு சோஃபா அடியில் கெடந்தது.” நோட்டை கையில் வாங்கிய சுந்தரி, 

“கொஞ்ச நேரம் முன்னால் என் வீட்டுக்காரர் கையில் பணத்தோட சோஃபாவில் உட்கார்ந்துண்டிருந்தார். அந்த நோட்டுகள்ல ஒண்ணு தவறிப் போய் சோஃபா அடியில் விழுந்திருக்கும். நல்லவேளை உன் கண்ணுல பட்டதால எடுத்துக் கொடுத்தே. சரி, நீ வேலையைப் பாரு.”நோட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தாள் சுந்தரி. 

என்னதான் பணம் இருந்தாலும் இப்படி கவனமில்லாமல் இருப்பது சரியில்லை. எண்ணிப் பார்க்கறபோது ஒரு நோட்டு குறைஞ்சிருப்பது தெரியாமலா போயிருக்கும்? புனிதம் மனதில் இந்த எண்ணம் தோன்றினாலும் வேறு ஏதோ ஒன்று நெருடியது! அது என்னவாக இருக்கும் என்று குழம்பினாள். 

அடுத்த வாரம் சுந்தரியின் அறையைக் கூட்டும்போது பீரோ அடியில் ஒரு 500 ரூபாய் நோட்டு கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளிப்பட்ட புனிதம் அழைத்ததின் பேரில் வெளிப்பட்டாள் சுந்தரி. கையில் அந்த ரூபாய் நோட்டை வைத்தபடி சுந்தரியை முறைத்துப் பார்த்த புனிதம், “இது உங்க அறை பீரோ கீழே கெடந்தது. இதுக்கென்னம்மா அர்த்தம்!” அழுத்தம் திருத்தமுமாய் கேட் டாள்.

அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்த சுந்தரி, “ஸாரி புனிதம்! பால்காரருக்கு பணம் செட்டில் பண்ணும்போது ஒரு நோட்டு தவறி விழுந்திருக்கும். அதுதான் இது! எடுத்துக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.” என்றபடி நோட்டை வாங்கிக் கொண்டாள்.

“நன்றி இருக்கட்டும். அன்னிக்கு, சோஃபா அடியில் கெடந்தது. இப்போ பீரோ அடியில் கெடக்கு அதே மாதிரி 500 ரூபா நோட்டு! இது தவறி விழுந்த மாதிரி எனக்கு தெரியல்ல…” புனிதம் பேச்சின் தோரணையே மாறியிருக்க எரிச்சலுற்றாள் சுந்தரி.

“அப்படின்னா?” 

“அம்மா, ஓரு தடவை கை தவறி விழுந்தா பரவாயில்லே. ரெண்டு தடவை விழுந்திருக்கு. அதாவது…வேணும்னே கீழே போட்ட மாதிரி இருக்கு!” 

“என்ன உளர்றே?”

“உளர்லே . இப்படித்தான் நடந்திருக்கும்னு என்னோட மனசாட்சி சொல்லுது, ஆமாம், என்னோட நாணயத்தையும் நேர்மையையும் சோதனை பண்ணிப் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு! அம்மா, நாங்க ஏழைகள்தான். ஆனால், நாணயமும் நேர்மையும் எங்கக் கிட்டே நெறையவே இருக்கு. அதோட மானமும், ரோஷமும் அளவுக்கதிகமாயிருக்கு. நீங்க இப்படி என்னை ரெண்டு தடவை சோதனை செய்ததால இனிமே இங்கே வேலை செய்ய எனக்கு பிடிக்கல்லேம்மா. நான் வரேன்” எனக் கூறி துடைப்பத்தை தரையில் வீசியெறி்ந்து விட்டு விடு விடுவேன்று நடையைக் கட்டினாள் புனிதம்.

செய்வதறியாது திகைத்துப் போய் நின்றாள் சுந்தரி.