இனி புதன் கிழமைகளில் Work From Home? பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பின்னணி இதுதான்

இனி புதன் கிழமைகளில் Work From Home? பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பின்னணி இதுதான்
பெங்களூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் ஐடி நிறுவனங்கள் தங்களின் பணி

பெங்களூர்: பெங்களூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் ஐடி நிறுவனங்கள் தங்களின் பணி நேரங்களை மாற்றவும், வாரத்தில் புதன்கிழமை தோறும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை ஐடி நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகிறது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்த ஐடி நிறுவனங்களில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐடி உள்பட பிற துறைகளில் புகழ்பெற்ற நிறுவனங்கள் பெங்களூரில் அதிகம் உள்ளதால் ஆண்டுதோறும் அங்கு மக்கள்தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.

மேலும் பலரும் பலரும் டூவீலர், கார்களில் பணிக்கு சென்று வருகின்றனர். இதனால் மக்கள் தொகை உயர்வை போல் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஐடி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெங்களூர் மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கூட போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை..

குறிப்பாக பெங்களூர் அவுட்டர் ரிங்ரோட்டில் பீக் ஹவர்ஸ்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதாவது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த அவுட்டர் ரிங்ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை நேரம் மாற்றம் மற்றும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளனர்..

இதுதொடர்பாக பெங்களூர் போக்குவரத்து போலீஸ் பிரிவின் இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிபிஎம்பி எனும் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள், பிஎம்டிசி எனும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது..

இந்த சமயத்தில் பெங்களூர் அவுட்டர் ரிங்ரோட்டை சுற்றி பல்வேறு சாலை பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவுட்டர் ரிங் ரோட்டை சுற்றி நடக்கும் சாலை பணிகளை விரைவாக முடிக்கவும், முக்கிய சந்திப்புகளில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ஐடி ஊழியர்களுக்காக ஏசி பஸ்களை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் ஐடி ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று விவாதிக்கப்பட்டது..

அதுமட்டுமின்றி ஐடி நிறுவனங்களில் பணி நேரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் எடுத்து கூறப்பட்டது. அதாவது ஐடி நிறுவனங்களில் காலை 7.30 மணிக்கு ஷிப்ட்டை தொடங்கினால் பீக் ஹவர்ஸில் போக்குவரத்து குறையும். அதேபோல் வாரத்தில் புதன்கிழமை வீட்டில் இருந்து ஐடி ஊழியர்களை பணியாற்ற வைக்க வேண்டும்.

இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கலாம்.அதேபோல் பார்க்கிங் வசதி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, சாலை பணிகளை விரைவாக முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி பெங்களூர் போக்கவரத்து போலீஸ் சார்பில் ஐடி நிறுவனங்களுக்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஐடி நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் பெங்களூரில் வாரந்தோறும் புதன்கிழைம ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அதுமட்டுமின்றி காலையில் ஷிப்ட் என்பதும் முன்கூட்டியே தொடங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது...

இதுதொடர்பாக பெங்களூர் ஐடி நிறுவனங்கள் சங்கத்தின் துணை தலைவர் கிருஷ்ண குமார் கவுடா கூறுகையில்,‛‛ "பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் தாங்கி கொள்ள முடியாத வகையில் உள்ளது. நாங்கள் அதிகாரிகளுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் விதிகளை அமல்படுத்தி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு பணி நேரங்களை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் இருந்து வேலை குறித்த அறிவிப்புகளை நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்'' என்றார்...