தையல் இல்லாத ஆடை தயாரிப்பு பிரபலமாகிறது புதிய '3டி' நிட்டிங்

திருப்பூர்:உலகம் முழுதும் பிரபலமாகி வரும் '3டி நிட்டிங்' எனப்படும், தையல் இல்லாத ஆடை வடிவமைப்பு (சீம்லெஸ் பேஷன்), முன்னணி தொழில் நகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், பல்வேறு தொழில் நகரங்களில், '3டி' நிட்டிங் எனப்படும் புதிய தொழில்நுட்பம் பரவியுள்ளது. துணியை வெட்டி, தைக்கும் முறைக்கு மாற் றாக, கம்ப்யூட்டரில் டிசைன் செய்யப்படும் மாதிரி, பின்னர் ஆடைகளாக வடிவமைக்கப்படுகிறது.
துணியை வெட்டி, தைத்து, ஆடையாக வடிவமைக்க வேண்டிய வேலை குறைகிறது; நுாலில் இருந்து, நேரடியாக ஆடையாக நிட்டிங் செய்யப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த, 'சைமாசெய்கி' என்ற நிறுவனம், திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளது.
உற்பத்தி செலவை குறைக்கும் 'ஜீரோ வேஸ்ட்' உற்பத்தி என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், '3டி நிட்டிங்' மூலமாக, துணிக்கழிவு உருவாவது, 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஆடை என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
தொழிற்சாலைகளில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம், 'ஆட்டோமேஷன்', 'டிசைனிங்' ஆகிய மூன்று தொழில்நுட்பத்தை இணைத்து, புதிய மாற்றத்தை கண்டறிந்து, செயல்படுத்த துவங்கிவிட்டனர்.
நிறுவனங்கள் வரவேற்பு இது குறித்து, 'ஸ்டார்ட்அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''ஜப்பான் தொழில்நுட்பத்தில், '3டி' நிட்டிங் திருப்பூரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், துணி 'வேஸ்ட்' உருவாவது, 90 சதவீதம் தடுக்கப்படும் என்பதால், அனைவரும் வரவேற்றுள்ளனர். தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தால், இத்தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். திருப்பூர் போன்ற நகரங்கள், இதனை பின்பற்றி, சீம்லெஸ் பேஷனில் முன்னேறிய நாடாக, இந்தியாவை உயர்த்த முடியும்,'' என்றார்.