நல்ல விலை கிடைத்தும் விளைவிக்க ஆள் இல்லை... ஊட்டி உருளைக்கிழங்குக்கு ஏன் இந்த நிலை...

நல்ல விலை கிடைத்தும் விளைவிக்க ஆள் இல்லை... ஊட்டி உருளைக்கிழங்குக்கு ஏன் இந்த நிலை...
முன்பெல்லாம் நீலகிரியில் மூன்று போகங்கள் உருளைக்கிழங்கு விவசாயம் செய்த விவசாயிகள் தற்பொழுது இதர காய்கறி வகைகளை அதிகமாகப் பயிர் செய்யத் துவங்கி விட்டனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் பயிர் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் முக்கிய பங்கு வகிப்பது ஊட்டியின் உருளைக்கிழங்கு.

பல ஆண்டுகளாக உருளைக்கிழங்கு நீலகிரி மக்களின் ஒரு அங்கமாகவே திகழ்கிறது. இவர்களது சமையலில் உருளைக்கிழங்கு என்பது ஒரு நீங்காத இடம் பிடிக்கும் ஒரு காய்கறியாக உள்ளது. ஆனால் இதன் விவசாய நிலங்களின் பரப்பளவு தற்போது குறைந்து கொண்டே வருகிறது.

முன்பெல்லாம் மூன்று போகங்கள் உருளைக்கிழங்கு விவசாயம் செய்த விவசாயிகள் தற்பொழுது இதர காய்கறி வகைகளை அதிகமாகப் பயிர் செய்யத் துவங்கி விட்டனர். தற்போது 1800 முதல் 3200 வரையிலும் உருளைக்கிழங்கு மண்டிகளில் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறந்த விலை கிடைத்தால் மட்டுமே நல்ல விளைச்சல் இருக்கும் பட்சத்தில் வாழ்வாதாரம் உயரும் எனக் கருத்தும் தெரிவிக்கின்றனர்....

இதுகுறித்து நுந்தலா பகுதியைச் சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயி பழனிச்சாமி கூறுகையில், “உருளைக்கிழங்கு விவசாயம் செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு 50 கிலோமீட்டர் 20 மூட்டைகள் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு டன் அடி உரம், வேலையாட்கள், டிராக்டர் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற செலவுகளும் உள்ளது...

ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 10 டன் விளைச்சல் இருந்தால் மட்டுமே இந்த விலையில் லாபகரமாக இருக்கும். இதே விலையில் பெற்றால் கையில் ஒன்றரை லட்சம் லாபம் எதிர்பார்க்கலாம். இந்த சீதோஷ்ண காலநிலையில் ஒரு சில நிலங்களில் சிறந்த விளைச்சலும் ஒரு சில பகுதிகளில் விளைச்சல் சற்று குறைவாகவே உள்ளது” எனத் தெரிவித்தார்...