வெறிச்சோடிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து நகர, புறநகர பேருந்துகள், நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டன.
திருச்சி மாநகர மக்களின் நீண்டநாள் கனவு நனவானது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், பேருந்து நிலையம் மாற்றத்தால், மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வந்த கடைகளில் வியாபாரம் முற்றிலும் ஸ்தம்பித்தது. மத்திய பேருந்து நிலையத்தை நம்பி தொழில் செய்து வந்த உணவகங்கள், ஸ்டேஷனரி கடைகள், டீ கடைகளில் கூட்டமின்றி காணப்பட்டது. பூ வியாபாரிகள், பத்தி, பொம்மை, பாசி-மணி விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
பஞ்சப்பூர் பேருந்து முனையம் நேற்று பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, அனைத்து புறநகர் பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்பட்டன. இதனால், மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் கூட்டம் இல்லை.
மத்திய பேருந்து நிலையத்துக்கு வழக்கம்போல நேற்று வந்த பயணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல உயர் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் விளக்கம் அளித்து, வழிகாட்டி அவர்களை பஞ்சப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முசிறி பேரூரைச் சேர்ந்த பயணி ஜே.கே.பழனிதேவேந்திரன் கூறும்போது, "பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்வதற்காக வந்தேன். இங்கு வந்த பிறகு தான் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை அறிந்தேன். ஊர் வளர்ச்சிக்கு மாற்றம் அவசியம் தான். அடுத்த 10 நாட்களில் நிலைமை சீராகிவிடும்" என்றார்.
மத்திய பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வரும் ஜோதிமணி (45) கூறும்போது, "பல ஆண்டுகளாக மத்திய பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறோம். நாள் ஒன்றுக்கு ரூ.3,500-க்கு வியாபாரம் நடைபெறும். இன்று வெறும் ரூ.120-க்கு தான் வியாபாரம் நடைபெற்றது. பேருந்து நிலைய இடமாற்றத்தில் கவனம் செலுத்திய அரசு, எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
பேருந்து நிலையத்தில் புத்தக நிலையம் நடத்தி வரும் கிராப்பட்டியைச் சேர்ந்த எஸ்.கிறிஸ்டி ஜாஸ்மின் (56) கூறியது: எங்கள் கடையில் தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள் அதிகளவு விற்பனை நடைபெறும். இன்று விற்பனையே இல்லை. நகர வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் முயற்சிக்கு வியாபாரிகள் ஒத்துழைப்புத் தரத் தயாராக உள்ளோம். மத்திய பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் கடைகள் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த பத்தி விற்கும் மாற்றுத்திறனாளி இப்ராஹிம் (58) கூறும்போது, "15 ஆண்டுகளாக மத்திய பேருந்து நிலையத்தில் பத்தி விற்பனை செய்து வருகிறேன். பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை அடுத்து, பஞ்சப்பூர் சென்றேன். ஆனால், எங்களை போன்ற சிறு விற்பனையாளர்கள், வியாபாரிகளுக்கு அங்கு இடமில்லை என்று எனது பத்தி பைகளை வாங்கி வீசியெறிந்துவிட்டனர்" என்றார்.
"எப்போதுமே பெரிய மாற்றங்கள் சிறிய ஏழை, எளிய மக்களுக்குத் தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நகரின் வளர்ச்சிக்கு பேருந்து முனையம் அவசியம் தான். அதேவேளையில் இதுபோன்ற சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் அரசு கவனத்தில் கொண்டு அவர்களுக்கும் அங்கு வியாபார வாய்ப்பை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.