கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி விடுங்க: கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்

கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி விடுங்க: கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்
கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில், காவிரி ஆற்றின் உபரி நீர் கடலில் சென்று வீணாகிறது. 'அதை காய்ந்த ஏரி, குளங்களுக்கு திருப்பி விட்டால், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்; விவசாயமும் செழிக்கும்' என்கின்றனர், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

ஜூன், ஜூலை பிறந்தாலே டெல்டா மாவட்டங்களில் ஒலிக்கும் ஒரே குரல், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வீணாகிறது என்பது தான். கரை புரண்டு காவிரியில் தண்ணீர் ஒடினாலும், கடைமடையில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் தண்ணீர் வறண்டு கிடக்கின்றன என்பது வேதனை அளிக்கும் உண்மையாக இருக்கிறது. இந்த நிலைக்கு தீர்வு காண, கடலில் கலக்கும் நீரை, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என்பது கோரிக்கை.

கர்நாடக, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. அணையின் முழு கொள்அளவு 120 அடி. அதற்கு மேல் உபரியாக வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடுகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர், மேலணை (முக்கொம்பு), கல்லணை, கீழ்ணை (அணைக்கரை) மூலம், பாசன வசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில், முக்கொம்பில் காவிரி ஆறு இரண்டாக காவிரி, கொள்ளிடம் என பிரிகிறது. கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என நான்கு ஆறுகளாக பிரிகிறது.

இதில் காவிரி, வெண்ணாறு ஆறுகளில் மட்டுமே 36 ஆறுகள் பிரிந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை வளப்படுத்துகின்றன. இதன் மூலம் 15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கல்லணை கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.

ஏரிகள் எத்தனை

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 764 ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்வளத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. இதில், கல்லணை கால்வாயின் கீழ் மட்டும் 600 ஏரிகள் உள்ளன. அத்துடன் கரூர் மாவட்டம் மாயனுார் அணையில் இருந்து பிரியும் கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யங்கொண்டான் வாய்க்கால் மூலம் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, பூதலுார் பகுதியிலும், திருச்சி, கரூர் மாவட்டங்களிலும் நுாற்றுக்கணக்கான ஏரிகள் தண்ணீர் பெறும் வசதி உள்ளது