லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல் இதோ!

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல் இதோ!
உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு கொடுத்த வக்கீல் ஒருவரிடம், குடிநீர் இணைப்பு..

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு கொடுத்த வக்கீல் ஒருவரிடம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்ட ராசிபுரம் நகராட்சி பில் கலெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில், இரண்டு நாட்களுக்கு முன், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. அதில், அரசு திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், வீட்டுவரி ரசீது, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன.

ராசிபுரம் நகராட்சி, 15வது வார்டை சேர்ந்தவர் வக்கீல் அன்பழகன், 50. இவர் குடிநீர் இணைப்பு பெயர் மாற்ற, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்திருந்தார்.

ராசிபுரம் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தவர் ரகுபதி, 35. நாமக்கல்லை சேர்ந்த இவர், ஆறு ஆண்டுகளாக ராசிபுரத்தில் பணியாற்றி வந்தார்.

இவர், அன்பழகனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கொடுக்குமாறு பேரம் பேசியுள்ளார். இந்த ஆடியோ, நேற்று வாட்ஸாப்பில் பரவியது. இதுகுறித்து, பொறுப்பு கமிஷனர் கோகுல்நாத், ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரித்தார்.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், ரகுபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இவர், ஏற்கனவே, 'குடி'போதையில் வேலை பார்த்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..

லஞ்சம் வாங்கிய அலுவலர்

சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், மின் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம், 47, என்பவர், 10 லட்சம் ரூபாய் ஒப்பந்த பணிக்கு, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்...

அனுமதி வழங்க கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வரைவு அலுவலர் ரவி, 55, என்பவர், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சண்முகம், சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

போலீசார் அறிவுறுத்தல்படி, அஸ்தம்பட்டி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு சென்ற சண்முகம், ரசாயனம் தடவிய, 1 லட்சம் ரூபாயை, மிட்டாபுதுாரை சேர்ந்த புரோக்கர் பிரகாஷ், 45, என்பவரிடம் நேற்று வழங்கினார்.

அவர், பணத்தை வாங்கி, ரவியிடம் வழங்கினார். அப்போது, மறைந்திருந்த போலீசார், ரவி, பிரகாஷ் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.

பஞ்., தலைவர் சுற்றிவளைப்பு

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மேல்சாணாங்குப்பம் பஞ்., தலைவர் சிவக்குமார், 48. வாணியம்பாடி ஜனதாபுரத்தை சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சீனிவாசன், மேல்சாணாங்குப்பத்தில், 7 ஏக்கர் நிலத்தில், வீட்டுமனை அமைக்க, நில வரைபடம் மற்றும் டி.டி.சி.பி., ஒப்புதல் பெற பஞ்., தலைவர் சிவக்குமாரை அணுகினார்.

அவர், 12 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அப்போது, 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, பணத்தை கொடுத்த நிலையில், மேலும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், ஒப்புதல் தரப்படும் என, சிவக்குமார் கூறினார்.

சீனிவாசன், திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பிய, 2 லட்சம் ரூபாயை, சிவக்குமாரிடம், நேற்று சீனிவாசன் கொடுத்தார். சிவக்குமார் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்...