தேங்காய், கொப்பரை விலை சரிவு வரத்து அதிகரிப்பால் மாறிய நிலவரம்.

தேங்காய், கொப்பரை விலை சரிவு வரத்து அதிகரிப்பால் மாறிய நிலவரம்.
தேங்காய், கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பால், அவற்றின் விலை குறையத் துவங்கி உள்ளது..

ஈரோடு,:தேங்காய், கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பால், அவற்றின் விலை குறையத் துவங்கி உள்ளது.

வெள்ளை ஈ தாக்குதல், போதிய மழையின்மை, நோய்களால் மரங்கள் கருகுவது போன்ற காரணங்களால், மூன்றாண்டாக தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.

வடமாநிலங்களில் அதிகமாக தேங்காய், தேங்காய் எண்ணெய் பயன்பாடு, பிற மாநிலங்களில் வழக்கத்தைவிட கூடுதல் தேவை ஆகியவற்றாலும் தேங்காய், கொப்பரை தேங்காய் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்தது.

மே முதல் அக்., வரை சீசன் காலம் என்றாலும், பிற காலங்களிலும் பரவலாக தேங்காய் வரத்து அதிமாக இருக்கும். இந்தாண்டு சீசன் துவங்கி, மூன்று மாதங்களாகியும், மூன்றில் இரண்டு பங்கே காய் வரத்தாகி, விலை உயர்ந்தது. இரு வாரமாக தேங்காய், கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து வருகிறது.

இதுபற்றி வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:

எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு கிலோ தேங்காய், 80 ரூபாயை கடந்தும், கொப்பரை தேங்காய் கிலோ, 270 ரூபாயை கடந்தும் விற்றது. தற்போது வரத்து அதிகரித்துள்ளது.

எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு ஒரே நாளில், 1.95 லட்சம் தேங்காய் வரத்து இருந்தது. கொப்பரை தேங்காயும் தரமாகவும், அதிகமாகவும் வரத்து உள்ளது .

தேங்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால், 1.95 லட்சம் காய் வரத்தான ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 20,000க்கும் குறைவான காய்களை, காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்காக வாங்கிச் சென்றனர்.

மற்ற காய்கள், கொப்பரையாக்கப்படுகிறது. தோப்பில் இருந்து வியாபாரிகள் நேரடியாக காய் வாங்குவதால், மார்க்கெட்டில் விலை குறையவில்லை.

இவ்வாறு கூறினர்.

ஓணம் பண்டிகையின் தேவையைப் பொறுத்து விலை உயரலாம். அதன் பின் விலை குறைய வாய்ப்புள்ளது.

விலை நிலவரம்

(1 கிலோ ரூபாயில்)

ரகம்

தேங்காய் (சாதா) 45 - 70

கொப்பரை 210 -245

கருப்பு தேங்காய் 62.60 - 70.69

பச்சை தேங்காய் 57.36 - 64