சேலை, தட்டு கொடுத்துட்டாங்க.. ரூ.200 கொடுக்கலை! எடப்பாடி கூட்டத்திற்கு வந்த பெண் சொன்ன மேட்டர்!.

சிவகங்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக அழைத்து வரப்படுபவர்களுக்கு ஒரு சேலை, ஒரு தட்டு மற்றும் ரூ.200 பணம் கொடுக்கப்படுவதாகப் பெண் ஒருவர் பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜூலை 7 முதல் எடப்பாடி பழனிசாமி கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. டெல்டாவில் அதிமுகவுக்குப் பெரியளவில் வெற்றிகள் கிடைக்காத சூழலில், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் அதிமுகவுக்கு ஆதரவு இருந்தது பல்வேறு கணிப்புகளை மாற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா ஸ்டைலில் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி செய்த சுற்றுப்பயணம் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் கட்சியினர் கூறி வந்தனர். அதேபோல் திமுகவுக்கு எதிரான பிரச்சாரம், பாஜக உடனான கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை முன்னதாகவே பேசி வருவதால், தேர்தல் நேரத்தில் மக்கள் மனதில் மாற்றும் வரும் என்றும் அதிமுக கணக்குப் போடுகிறது..
நேற்று எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்தில் மக்களைச் சந்தித்தார். திருப்பத்தூர் தொகுதி தொடங்கி சிவகங்கை அரண்மனை வாசல் வரை உள்ள பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்தித்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும், மகளிரும் மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். பெரியளவில் கூட்டம் கூடியது..
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு வந்த பெண் ஒருவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் பெண் பேசுகையில், எல்லா ஊர்களிலும் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.. ஒரே மாதிரி சேலை கொடுத்தார்கள். இது நல்லாருக்கா? ஒரு சேலை, ஒரு தட்டு, ரூ.200 பணம்..
ஜாலியாக இருக்கும்னு வந்திருக்கோம்.. நாங்கள் இந்திரா நகர்ப் பகுதியில் இருந்து 300 பேர் வருகிறோம்.. மொத்தமாக 4 ஆயிரம் பேரை அழைத்து வந்துள்ளார்கள்.. எங்களுக்கு இன்னும் ரூ.200 கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமியின் பயணத்திற்குப் பணம் கொடுத்துத்தான் மக்கள் அழைத்து வரப்படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது..