ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

சென்னை: ரூ.1,000 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 கோடி கமிஷனாக பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸார் சென்னை வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார்.
அவர், தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.1,000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்தார். இதையறிந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் கடன் வாங்கித் தருவதாக அந்த தொழிலதிபரிடம் உறுதி அளித்துள்ளார். இதற்கான கமிஷன் தொகையாக ரூ.10 கோடியை முதலில் தரும்படி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அந்த தொழிலதிபர் சீனிவாசனுக்கு முதல் கட்டமாக ரூ.5 கோடியை வழங்கியதாக கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சீனிவாசன், உறுதி அளித்தபடி கடனை பெற்றுக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும், கமிஷனாக பெற்ற தொகையையும் திரும்ப கொடுக்கவில்லையாம். இதனால், அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த பண மோசடி தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் சீனிவாசன் மீது புகார் செய்தார்.
அதன்படி, அப்பிரிவு போலீஸார், சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை 2013-ம் ஆண்டு கைது செய்தனர். அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன், 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை வந்த டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், அண்ணாநகர் கிழக்கு 4-வது தெருவில் உள்ள வீட்டில் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்தனர். பின்னர், அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட சீனிவாசன் மீது சென்னையிலும் இதேபோல் பல வழக்குகள் உள்ளன.
அவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அக்குபஞ்சர் டாக்டர் படிப்பும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.