கடனை அடைக்க செலுத்திய ரூ.4 லட்சத்தை Advance EMI-யாக கணக்கிட்ட வங்கி.. ஆடிப்போன வாடிக்கையாளர்..!!

கடனை அடைக்க செலுத்திய ரூ.4 லட்சத்தை Advance EMI-யாக கணக்கிட்ட வங்கி.. ஆடிப்போன வாடிக்கையாளர்..!!
ஒரு வாடிக்கையாளர் பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கி ரூ. 8 லட்சம் கல்விக் கடன் பெற்றிருந்தார்.

ஒரு வாடிக்கையாளர் பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கி ரூ. 8 லட்சம் கல்விக் கடன் பெற்றிருந்தார். கடந்த மார்ச் மாதம், கடனை குறைக்கும் நோக்கில், ஒரே முறையில் ரூ. 4 லட்சம் செலுத்தியுள்ளார். இதனால், வட்டியும் பெருமளவு குறையும் என்று வாடிக்கையாளர் நினைத்தார். ஆனால், வங்கி அந்த ரூ. 4 லட்சத்தையும் மாத தவணைகளாக (Advance EMIs) பதிவு செய்துவிட்டது. அதாவது, அடுத்த பல மாதங்களுக்கு அவரின் மாத தவணைகள் முன்கூட்டியே செலுத்தப்பட்டதாக கணக்கிடப்பட்டுவிட்டது..

இதுதொடர்பாக அந்த வாடிக்கையாளருக்கு எந்தவொரு முன்னறிவிப்பையும் வங்கி நிர்வாகம் வழங்கவில்லை. இவரின் முக்கிய நோக்கமே கடன் தொகையை நேரடியாக குறைத்து, வட்டியையும் குறைக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதை வங்கி நிர்வாகம் தவறாக புரிந்துக் கொண்டு செயல்பட்டுள்ளது. இதனால், முதன்மையான கடன் தொகையும் குறையவில்லை. வட்டி கணக்கீடு தொடர்ந்தது நடந்தது. வாடிக்கையாளர் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கவில்லை.

எப்போது இது நடக்கிறது..?: வாடிக்கையாளர் EMI தேதி நெருங்கும்போது, பெரிய தொகையை செலுத்தும் பட்சத்திலோ அல்லது தொகையை செலுத்தும்போது "இதுவே என்ன நோக்கம்" என்று தெளிவாகக் குறிப்பிடாமல் இருந்தாலோ வங்கிகள் அந்த தொகையை முன்கூட்டியே தவணையாக பதிவு செய்து விடுகின்றன. எனவே, வாடிக்கையாளர் ஒரு பெரிய தொகையை செலுத்தும்போது, வாங்கிய கடன் தொகையை குறைக்கவா அல்லது மாத தவணையா என்பதை வாடிக்கையாளரின் விருப்பப்படி தீர்மானிக்க வேண்டும். இதுகுறித்த முன்னறிவிப்பை வாடிக்கையாளருக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும்

வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?: வங்கியில் கடன் வாங்கியிருந்தால், பெரிய தொகையை செலுத்தும் போது, "இது முதன்மை தொகையை குறைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு செலுத்த வேண்டும். வங்கி தவறாக கணக்கிட்டால், உடனே கிளையில் புகாரளிக்க வேண்டும். தேவையானால், வங்கி நுகர்வோர் கோர்ட்டு வழியாக நடவடிக்கை எடுக்கலாம். மேலும், கல்விக் கடனைக் கையாளும் கிளைக்கு நேரில் செல்ல வேண்டும். பின்னர், வங்கி மேலாளரை சந்தித்து, உங்கள் பிரச்சனையை விவரித்து புகாரளிக்க வேண்டும்

வங்கி மேலாளருக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை தயார் செய்ய வேண்டும். அதில், கடன் கணக்கு எண், ரூ.4 லட்சம் செலுத்திய தேதி மற்றும் விவரங்கள் (பரிமாற்ற ரசீது/UTR No/பேங்க் ஸ்டேட்மெண்ட்), இந்த தொகை "முதன்மை தொகையை குறைக்கவே" செலுத்தப்பட்டது என்பதை தெளிவாக எழுதவும், முன்கூட்டிய தவணையாக மாற்ற திட்டமில்லை என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

அடுத்ததாக பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிருப்தி முறையீட்டு தளத்தில் (Grievance Portal) புகார் அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வ கோரிக்கை, பரிமாற்ற ஆதாரம் மற்றும் கடைசி நிலவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். ஒரு மாதம் கழித்தும் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால், ரிசர்வ் வங்கி (RBI) வங்கி ஓம்புட்ஸ்மேன் (Banking Ombudsman) தளத்தில் புகார் அளிக்கலாம். அனைத்து ஆதார ஆவணங்களையும் (புகார் கடிதம், வங்கி பதில்கள், ரசீது) இணைக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் கல்விக் கடன்களுக்கு முன்பணம் செலுத்த அனுமதி உள்ளது. உங்கள் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ எந்தவித அபராதமும் இல்லாமல் செலுத்தலாம். வங்கிகள், கடனாளியின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல், பெரிய தொகைகளை முன்கூட்டிய தவணையாக கணக்கிடக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு, இந்த மாதிரியான பெரிய பணப்பரிமாற்றங்களை "முதன்மை தொகைக்காக" என்று தெளிவாக எழுதும் உரிமை உள்ளது.