அம்பானியான சுந்தர் பிச்சை.. ஆனால் அவசரப்பட்டு விற்றதால்.. 8000 கோடி லாபம் அவுட்

நியூயார்க்: கூகுள் மற்றும் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை பில்லியரான மாறியுள்ளதை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஏனெனில் மாத சம்பளம் வாங்கி வந்த முதலாளி அல்லாத ஒருவர் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுக்கு அதிபதியாக மாறியிருப்பது சாதாரண விஷயம் அல்ல.. அதேநேரம் சுந்தர் பிச்சை பில்லியனராக மாறியதை போல், ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு ஒரு தவறால் லாபத்தையும் இழந்துள்ளார். அதாவது 8000 கோடிரூபாய் அளவிற்கு லாபத்தை தவறவிட்டிருக்கிறார்..
கூகுள் மற்றும் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையின் நிகர சொத்து மதிப்பு இப்போது $1.1 பில்லியனைத் தாண்டியுள்ளது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் அவர் பில்லியனர் அந்தஸ்தை அடைந்த அரிதான நிறுவனர் அல்லாத நிர்வாகிகளில் ஒருவராகி உள்ளார். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இப்படி பில்லியனராக உலக அளவில் உள்ளனர்...
பங்கு சந்தை எழுச்சி
இந்த சாதனைக்கு பின்னணியில் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் இருந்த சந்தை மதிப்பு, தற்போது $1 டிரில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு 120% வருமானத்தை அளித்திருக்கிறது ஆல்பாபெட் இன்க். ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியால் ஆல்பாபெட் நிறுவனம் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது..
ஆல்பாபெட் ஏஐ
ஆல்பாபெட்டின் AI உருவாக்கத்தில் சுந்தர் பிச்சை முக்கிய பங்கு வகித்திருக்கிறார். தான் வேலை செய்யும் நிறுவனத்தை வளர்க்க பல்வேறு செயல்களை சுந்தர் பிச்சை செய்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டில் லண்டனை தளமாகக் கொண்ட டீப் மைண்டை $400 மில்லியன் கையகப்படுத்தி இணைத்தார். இதுதான் ஆல்பாபெட்டின் AI வளர்ச்சிக்க முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், அவர் கணிசமான AI முதலீடுகளை செய்ய காரணமாக இருந்துள்ளார்..
விண்ட்சர்ஃப் நிறுவனம்
அதாவது கடந்த ஆண்டு மட்டும் $50 பில்லியன் மூலதனச் செலவுகள் ஆல்பபெட்டின் ஏஐக்காக செய்யப்பட்டிருக்கிறது. AI திறன்கள் வளர்க்கும் ஸ்டார்ட் அப்களை கையகப்படுத்துதல்கள் மூலம் தொடர்ந்து அந்நிறுவனம் வேகமாக வளர்த்து வருகிறது. அண்மையில் கூட ஸ்டார்ட்அப் நிறுவனமான விண்ட்சர்ஃப்பை $2.4 பில்லியன் மதிப்பில் வாங்கியிருக்கிறது ஆல்பாபெட் நிறுவனம். ஆல்பாபெட் நிறுவனம் இப்படி வளந்த காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. அந்த வகையில் தான் சுந்தர் பிச்சைக்கும் லாபம் கிடைத்துள்ளது..
சுந்தர் பிச்சையின் பங்குகள்
சுந்தர் பிச்சைக்கு ஏராளமான சொத்து இருந்தபோதிலும், ஆல்பாபெட்டில் 0.02% பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார் . தற்போது இது சுமார் $440 மில்லியன் மதிப்புடையது ஆகும். ப்ளூம்பெர்க் வெளியிட்ட கருத்துக்களின் படி, சுந்தர் பிச்சையின் நிகர சொத்து மதிப்பில் பெரும்பகுதி பணமாக(டாலராக) இருக்கிறது...
8000 கோடி லாபம் குறைவு
கடந்த 10 வருடங்களில் அவர் $650 மில்லியன் மதிப்புள்ள ஆல்பாபெட் பங்குகளை சுந்தர் பிச்சை விற்றுள்ளார். அவர் தனது பங்குகளைத் தக்க வைத்துக் கொண்டிருந்தால், அவரது பங்குகள் இப்போது $2.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. பங்குகளை விற்ற காரணத்தால் $1 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை சுந்தர் பிச்சை தவறவிட்டுள்ளார். இந்திய மதிப்பு 8000+ கோடி ரூபாய் லாபத்தை சுந்தர்பிச்சை தவறவிட்டிருப்பதாக ப்ளூம்பெர்க் கூறியுள்ளது....
சுந்தர் பிச்சை முதலீடுகள்
சுந்தர் பிச்சை தொழில்நுட்பத்திற்கு வெளியே, விளையாட்டுகளில் முதலீடு செய்கிறார். லண்டன் ஸ்பிரிட் கிரிக்கெட் உரிமையில் 49% பங்குகளை சமீபத்தில் $182 மில்லியனுக்கு வாங்கியிருக்கிறார். இந்த அணி 2020 இல் தொடங்கப்பட்ட இங்கிலாந்தை தளமாகக் கொண்ட லீக் அணியாகும். சுந்தர் பிச்சையை பொறுத்தரை ஒரு நிறுவனத்தின் ஓனராக இல்லாவிட்டாலும், அவர் நீண்ட காலமாக கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பதால் பில்லியனராக இப்போது மாறியிருக்கிறார். உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான ஆல்பாபெட் தான் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும்...