நான் கமல் ரசிகன்னு சொன்னேன்! ஆனால், ரஜினி என்னை பற்றி இப்படி சொல்லி இருக்காரு! லோகேஷ் ஓபன்

சென்னை: 'மாநகரம்' தொடங்கி 'லியோ' வரை தன் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள 'கூலி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பற்றி லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது..
கூலி' திரைப்படம் துறைமுகத்தில் நடக்கும் தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்துடன், தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் போன்ற பலரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஒரு முன்னணி பாலிவுட் நடிகர் கேமியோ வேடத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் 'கூலி' வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான 'பவர்ஹவுஸ்' பாடல் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்துள்ளது...
கூலி பட சர்ச்சை
'கூலி' படத்தில் ரஜினிகாந்த் இதுவரை கண்டிராத ஒரு புதிய மற்றும் ஸ்டைலான கெட்டப்பில் தோன்றுகிறார். இது படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் டைட்டில் டீசர் வெளியான சமயத்தில், பிரபல சண்டைக் காட்சி இயக்குநர் சாம் ஆண்டர்சன், தனது 'குங்குமப்பொட்டு கவுண்டர்' திரைப்படத்தின் பாடல் ஒன்றில் இடம்பெற்றிருந்த "கூலி" என்ற வார்த்தையை லோகேஷ் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், படக்குழு இந்த விஷயத்தில் சுமூகமான தீர்வு கண்டதாகத் தெரிகிறது...
மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள்
லோகேஷ் கனகராஜின் படங்களில் காணப்படும் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுக்கு 'கூலி' படமும் விதிவிலக்கல்ல. ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதுபோன்ற அதிரடி சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) குறித்த பேச்சுகள் பரவலாக இருந்தாலும், 'கூலி' திரைப்படம் LCU இன் ஒரு பகுதியாக இருக்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ரசிகர்கள் மத்தியில் இது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
லோகேஷ் கனகராஜ் பேட்டி
லோகேஷ் கனகராஜ் ஒரு தீவிர கமல் ரசிகர் என்பது திரையுலகில் அனைவரும் அறிந்ததே. இது குறித்து பிரபல டூரிஸ்ட் டாக்கிஸ் சேனலில் பேசிய லோகேஷ், "எங்கள் வீட்டில் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்தான். நானும் சிறுவனாக இருந்தது முதல் ரஜினி ரசிகராகவே இருந்தேன். ஆனால், நான் பார்த்த 'சத்யா', 'விருமாண்டி', 'தேவர் மகன்' போன்ற படங்கள் என்னை கமல் ரசிகனாக மாற்றிவிட்டது" என்று வெளிப்படையாகப் பேசினார்...
ரஜினி சொன்ன விஷயம்
மேலும், 'கூலி' படத்தின் கதை சொல்லும் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் லோகேஷ் பகிர்ந்து கொண்டார். "நான் ரஜினி சாரிடம் 'கூலி' கதையை சொன்ன போது நான் கமல் ரசிகன் என அவரிடம் சொல்லிவிட்டேன். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 'கூலி' படத்தின் டப்பிங் முடிந்தபின் என் உதவியாளர்களிடம், 'லோகேஷ் கமல் ரசிகர் என என்னிடம் சொன்னார். அவரை ஆடியோ லான்ச்சில் பார்த்துக்கொள்கிறேன்' என சிரித்தபடி சொல்லியிருக்கிறார்." ரஜினியின் இந்தப் பரந்த மனப்பான்மையும், நகைச்சுவை உணர்வும் அவர் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது...
தளபதி ரஜினி
"நான் கமல் ரசிகனாக இருந்தாலும், ரஜினி சாருக்கு எப்படி காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து பொறுப்பாக இயக்கியுள்ளேன். கவனமாக, பொறுப்புடன் எடுங்கள் என கமல் சாரே என்னிடம் சொன்னார். நான் ரசித்த தளபதி ரஜினியை 'கூலி' படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள்," என்று லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார்..
இரு துருவங்கள்
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையே உள்ள ஆழ்ந்த நட்பு, பரஸ்பர மரியாதை, மற்றும் தொழிலின் மீதான காதல் எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. சினிமா களத்தில் இவர்களுக்குள் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நிற்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 'விக்ரம்' படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் தனது அடுத்த படத்தையும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கே இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்...
கூலி' திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்குப் புதுவித அனுபவத்தையும், லோகேஷ் கனகராஜின் தனித்துவமான மேக்கிங் பாணியையும் கொண்டு வருமா என்பதை அறிய ஆகஸ்ட் 14 வரை காத்திருப்போம்.