இந்தியாவை விட துபாயில் மட்டும் தங்கம் இவ்வளவு குறைவாக இருக்கே ஏன்! அங்கிருந்து தங்கம் வாங்கி வரலாமா?

சென்னை: நமது நாட்டுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய அமீரக நகரங்களில் ஒன்றான துபாயில் தங்கம் விலை குறைவாகவே இருக்கும். கிட்டத்தட்ட 5-7% வரை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் துபாயில் தங்கம் விலை குறைவாக இருக்கும். துபாயில் மட்டும் தங்கம் விலை குறைவாக இருக்க என்ன காரணம்! இதன் பின்னணி என்ன.. துபாயில் இருந்து நம்மால் தங்கத்தை வாங்கி வர முடியுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் உள்ள மக்கள் தங்கத்தையே பிரதான சேமிப்பாகக் கருதுகிறார்கள். இதனால் குறைந்த விலையில் எங்காவது தங்கம் கிடைத்தால் அதன் மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகமாக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது பலரும் துபாயைக் கவனிப்பார்கள். நவீன கட்டிடக்கலை, ஆடம்பரமான ஷாப்பிங் மட்டுமின்றி துபாய்க்கு "தங்க நகரம்" என்ற பெயரும் இருக்கிறது. ஏனென்றால் உலகின் புகழ்பெற்ற தங்கச் சந்தைகள் துபாயில் இருக்கிறது..
மேலும், இந்தியாவில் உள்ள தங்கத்தின் விலையை விடத் துபாயில் தங்கத்தின் விலை குறைவாகவே இருக்கும். இதற்கான காரணத்தைப் பார்க்கும் முன்பு, துபாய்க்கும் தங்கத்துக்கும் இடையேயான தொடர்பைப் பற்றித் தெரிந்து கொள்வோம்..
தங்கச் சுரங்கம் இல்லை
முதலில் துபாயில் சொந்தமாகத் தங்கச் சுரங்கங்கள் எதுவும் இல்லை. ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவிலிருந்தே துபாயிக்கு தங்கம் செல்கிறது. அங்கிருந்ததெல்லாம் தங்கத்தை வாங்கி, அதைச் சுத்திகரிக்கும் வேலையைத் துபாய் செய்கிறது. பிறகு அந்த சுத்திகரித்த தங்கத்தை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குத் துபாய் விற்கிறது.
கேரட் தங்கம்
விலைக்கு முன்பு நாம் தூய்மை குறித்துத் தெரிந்து கொள்வோம். தங்கத்தின் அளவை அல்லது தூய்மையை கேரட் மூலம் அளவிடுவார்கள். 24 கேரட் தங்கம் என்பது 24 பாகம் சுத்தமான தங்கத்தைக் கொண்டது. அதாவது 100% தங்கத்தைத் தான் 24 கேரட் தங்கம் என்பார்கள். அதேநேரம் 22 கேரட் தங்கம் என்றால் 22 பாகம் தங்கம் மற்றும் 2 பாகம் வேறு உலோகம் இருக்கும். அதாவது 91.6% தங்கமும் மீதம் வேறு உலோகங்கள் இருக்கும். இதுபோலத் தான் 21 மற்றும் 18 கேரட் தங்கத்தில் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவு 3 மற்றும் 6 பாகங்களாக இருக்கும்...
விலை வேறுபாடு!
அடுத்து முக்கியம் விலை.. துபாய் நகை குழுமம் தான் அங்குத் தங்கத்தின் விலையை முடிவு செய்கிறது. இது தங்கத்தின் தற்போதைய விலையை மக்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது. இதனால் துபாயில் பெரும்பாலான நகைக்கடைகளில் 'சஜஸ்டட் ரீடெயில் ஜுவல்லரி பிரைஸ்' என்ற பெயரில் தங்கத்தின் விலையை வெளிப்படையாகவே சொல்லிவிடுவார்களாம். இந்த விலை தினமும் 3 முறை மாறும்.
நீங்கள் அமீரக திர்ஹாம் (AED) மூலம் அங்குத் தங்கம் வாங்கலாம். கடந்த ஜூலை 23ம் தேதி நிலவரப்படி தற்போது ஒரு 1 AED வாங்க உங்களுக்கு ரூ 23.50 தேவை. அன்றைய தினம் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 405.25 AED ஆக இருந்தது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 9,523 ஆகும். அன்றைய தினம் நமது நாட்டில் அதே 24 கேரட் தங்கம் விலை ரூ 9,888ஆக இருந்தது. அன்று 22 கேரட் தங்கம் AED 375.25ஆகவும், 18 கேரட் தங்கம் AED 308.50 ஆகவும் இருந்தது.
கட்டுப்பாடுகள்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நீங்கள் துபாயில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள தங்கம் வாங்கினால் அதில் ரூ. 7,000 வரை சேமிக்கலாம். அதேநேரம் மறுபுறம் துபாயிலிருந்து தங்கத்தைக் கொண்டு வருவதும் கூட எளிதான வேலை இல்லை. நீங்கள் அதிகபட்சம் ஒரு கிலோ வரை தங்கத்தை செக்டு பேக்கேஜில் கொண்டு செல்லலாம். ஆனால், ஒரு கிலோ தங்கம் எடுத்து வரக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும். மேலும், அதற்கான வரியும் செலுத்த வேண்டும்.
இந்தியப் பெண்கள் 40 கிராம் வரை தங்கம் அல்லது அதிகபட்சம் ரூ 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் 20 கிராம் தங்கம் அல்லது அதிகபட்சம் ரூ 50,000 மதிப்புள்ள தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கான ஆவணங்களும் கையில் வைத்திருக்க வேண்டும்..
வரி இருக்கு
மேலும், இந்தியாவில் தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரி உள்ளது. ஆனால் துபாயில் ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆனால் 5% மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) உள்ளது. இருப்பினும், இந்த வாட் வரியை முழுமையாகத் திரும்பப் பெறலாம். சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் வாட் வரியைத் திரும்பப் பெற முடியும். இதன் காரணமாகவே விடுமுறைக்காகத் துபாய் செல்வோர் வரும்போது தங்கம் வாங்கி வருகிறார்கள். சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை எடுத்து வரும்போது சிக்கல் எதுவும் இருக்காது..
எவ்வளவு குறைவு?
இந்தியர்களுக்குத் துபாயில் 24 காரட் தங்கம் 5% முதல் 7% வரை மலிவாக இருக்கும். ஆனால், ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் எப்படித் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்ய ஹால்மார்க் முத்திரை இருக்கிறதோ அதுபோல துபாயில் வாங்கும் தங்கத்திற்குத் துபாய் சென்ட்ரல் லேபரேட்டரி டிபார்ட்மென்ட் வழங்கிய பரீக் சான்றிதழ் இருக்க வேண்டும். அப்போது தான் அது தூய்மையான தங்கம் என்பது தெரிய வரும்..