வாடகை வீட்டுதாரர்களுக்கு குஷி! பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 644600 வீடுகள்! பிஎம் ஆவாஸ் யோஜனா அட..

சென்னை: பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஜூலை 17ம் தேதி வரையில் தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 7,43,299 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது..
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டமான, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், கடந்த 2015-ல் மத்திய அரசால் துவங்கப்பட்டது.. நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கு, மாநில அரசுடன் சேர்ந்து, உறுதியான வீடுகளை கட்டி கொடுப்பதே இதன் நோக்கமாகும்...
நிலம், வீடு கட்ட மானியம்
நிலம் வைத்துள்ள மக்கள் வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கிக்கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது என 3 பிரிவுகளாக இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது...
இந்த திட்டத்தின்கீழ் வட்டி விகிதம் குறைவு. வருமானத்திற்கு ஏற்ப மானியம் மாறுபடும். வீட்டின் அளவுக்கேற்ப இந்த மானிய தொகை வழங்கப்படுகிறது.. கடனை திருப்பி செலுத்த 20 வருடங்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது.
கழிப்பறை வசதி
கட்டித்தரப்படும் வீடுகளில் கழிப்பறை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் வசதியும் சேர்த்தே செய்து தரப்படுகின்றன.. . வீடுகளை வேகமாக கட்டி முடிப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, நேரடி ஆய்வுகள், நிதியை விடுவிப்பது போன்றவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சமாகும்...
75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.. அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கென தரப்பட்டுள்ளது..
ஆன்லைனில் வசதி
PMAY என்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தினை பற்றியும் ஆன்லைனிலும் தெரிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதன் 2ம் கட்டம் கடந்த 2024ல் துவக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் வருகிற 2029ம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் 4.95 கோடி தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் வீடுகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் இலக்குகளை அடைவதற்கான வேகத்தை அதிகரிக்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..
மத்திய அமைச்சர் தகவல்
அந்தவகையில், மாநிலங்களவையில் இந்த திட்டம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசனி எழுத்துப்பூர்வமாக, பதில் ஒன்றை தந்துள்ளார்..
அதில், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கடந்த 17ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் 9 லட்சத்து 57,825 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 7 லட்சத்து 43,299 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 வருடங்களில் தமிழக அரசால் மொத்தம் 59,121 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மத்திய பங்காக, ரூ.2158.14 கோடி மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுள்ள கூடுதல் குடும்பங்களை அடையாளம் காண தமிழக அரசு ஆவாஸ்+ 2024 கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை.. கொரோனா தொற்று ஏற்பட்டு, பொது ஊரடங்கு காலத்தில், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் சிறிது பாதிக்கப்பட்டது...
சவால்கள், தாமதம்
இது தவிர, மாநில கருவூலத்திலிருந்து திட்டத்தின் மாநில முதன்மை கணக்கிற்கு மத்திய மற்றும் மாநில பங்கை வெளியிடுவதில் தாமதம், பயனாளிகளின் விருப்பமின்மை, நிரந்தர இடம்பெயர்வு, இறந்த பயனாளிகளின் வாரிசுரிமையில் ஏற்பட்ட சர்ச்சை, மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களால் நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் நேரிட்ட தாமதம் போன்ற சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன.
இந்தத் திட்டத்தின் கீழ் இலக்குகளை அடைவதற்கான வேகத்தை அதிகரிக்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்..