மழையால் சாய்ந்த நெற்பயிர் அரும்புலியூர் விவசாயிகள் கவலை..

மழையால் சாய்ந்த நெற்பயிர் அரும்புலியூர் விவசாயிகள் கவலை..
அரும்புலியூர் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பொழிவால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள்

அரும்புலியூர்:அரும்புலியூர் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பொழிவால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் நிலத்தில் சாய்ந்திருப்பது விவசாயிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது...

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நவரை பருவத்தை தொடர்ந்து, விவசாயிகள் சொர்ணவாரி பருவ சாகுபடிக்கு அதிக அளவில் நெல் பயிரிட்டுள்ளனர்.

அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர், கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, காவிதண்டலம், களியப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் கிணறு மற்றும் பாலாற்று பாசனம் மூலம் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்...

இதில், மே மாதம் நடவு செய்த பயிர்கள் தற்போது கதிர் வந்த நிலையிலும், ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையிலும் உள்ளன.

இந்நிலையில், சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே திடீர் மழைப்பொழிவு ஏற்படுகிறது.

இவ்வாறு இரு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழைப் பொழிவால் அரும்புலியூர், கரும்பாக்கம், சாத்தணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கதிர் வந்த நிலையிலான நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து உள்ளன.

மழை பொழிவு தொடர்ந்தால் அப்பயிர்கள் சேதமாகி மகசூல் பாதிக்கும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்..