லஞ்சம் கொடுத்து ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானி அலுவலகம் உட்பட 35 இடங்களில் ED ரெய்டு

லஞ்சம் கொடுத்து ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானி அலுவலகம் உட்பட 35 இடங்களில் ED ரெய்டு!
மு.ஐயம்பெருமாள் & சே. பாலாஜி
யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி வீடு, அலுவலகம் உட்பட 35 இடங்களில் அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்தி இருக்கிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி ஒரு நேரத்தில் உலக அளவில் பெரிய கோடீஸ்வரராக இருந்தார். ஆனால் தவறான நிர்வாகத்தால் அவரது பெரும்பாலான கம்பெனிகள் திவாலானது. ரிலையன்ஸ் கம்ப்யூனிகேசன் வாங்கிய கடன்களை திரும்ப கொடுக்கவில்லை. இதற்காக சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் அனில் அம்பானி மீது மோசடி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. தற்போது அனில் அம்பானியிடம் ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா போன்ற நிறுவனங்கள் மட்டுமே கையில் இருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் கடனால் மூடப்பட்டுவிட்டது. அல்லது அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கிகள் அனில் அம்பானியின் கம்பெனியை பிடுங்கி ஏலத்தில் விட்டுள்ளது.
இந்நிலையில் யெஸ் வங்கியில் இருந்து ரூ.3000 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனி கடன் வாங்கியது. இக்கடனை ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டது. 2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் ரூ.3000 கோடியை கடன் வாங்கியது. யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போதிய ஆவணங்கள் இல்லாமல் கடன் வாங்கப்பட்டுள்ளது. கடன் கொடுக்க யெஸ் வங்கி நிர்வாகிகள், உரிமையாளர்களும் தேவையான உதவி செய்துள்ளனர். கடன் வாங்க தனிப்பட்ட முறையில் யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதை சி.பி.ஐ. சமீபத்தில் கண்டுபிடித்து நிதி முறைகேடு தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்தது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனியில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து செபி அமைப்பும் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து இருந்தது. சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலையில் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது தொடர்பாக 25 பேரிடம் விசாரணை நடத்தினர். அதோடு இம்மோசடியில் தொடர்புடைய 50 நிறுவனங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்..