ஈரோட்டில் இருந்து ஒரு பன்னீர் சாம்ராஜ்ஜியம்! எப்படி சாத்தியமாக்கினார் மில்கி மிஸ்ட் சதீஷ்குமார்?

பெருந்துறை, ஈரோடு: இந்தியாவில் பால் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறை என்பது மிகப்பெரியது. பால் மட்டுமில்லாமல் நெய், பன்னீர், தயிர், ஐஸ்கிரீம் என பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுக்குமே இந்தியாவில் எப்பொழுதுமே டிமாண்ட் அதிகம்.
இந்திய சந்தையை பொறுத்த வரை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களும் தான் பால் பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சாதாரண பின்புலத்திலிருந்து வந்தவர்களும் கூட இந்த தொழிலில் கால் பதித்து பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம். இதன் பின்னணியில் இருப்பவர் சதீஷ்குமார்.
சதீஷ்குமார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ,1994 ஆம் ஆண்டு இவருக்கு 16 வயதானபோது தன்னுடைய தந்தையின் பால் தொழிலுக்கு உதவுவதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தினார். குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டு விட வேண்டும் என்ற நோக்கத்திற்காக படிப்பை விடுத்து பால் தொழிலில் கால் பதித்தார். அந்த 16 வயது சிறுவன் தான் தற்போது 2000 கோடி மதிப்புள்ள மில்கி மிஸ்ட் நிறுவனத்தை கட்டியெழுப்பி இருக்கிறார்.
1997 ஆம் ஆண்டில் ஈரோட்டின் பெருந்துறையில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் இருபதுக்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டு பொருட்களை விற்பனை தயாரித்து விற்பனை செய்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் பால் விற்பனையில் கவனம் செலுத்தும் போது மில்கி மிஸ்ட் மட்டும் பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனத்திற்கு பன்னீர், தயிர், சீஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களில் இருந்து தான் அதிக வருமானமும் கிடைக்கிறது
தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் உள்ளூரிலேயே பால் வாங்கிக் கொள்வார்கள் அது தவிர இங்கே அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் இருக்கிறது . எனவே தமிழ்நாட்டில் வெறும் பால் மட்டுமே விற்பனை செய்வது நிறுவன வளர்ச்சிக்கு உதவாது என்பதை உணர்ந்த சதீஷ்குமார் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தினார். அவருடைய இந்த மாற்று யோசனை தான் நிறுவனத்தை தற்போது மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்து எடுத்து இருக்கிறது.
பாலை விட பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் செல்ஃப் லைஃப் அதிகம். அவற்றின் மூலம் கிடைக்கும் லாபமும் அதிகம். இதுதான் தொழில் உத்தி, அதை சிறப்பாக கற்று கொண்டார். பன்னீர் என்றாலே மில்கி மிஸ்ட் பன்னீர் என மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. பெருந்துறையில் முழுக்க தானியங்கு முறையில் செயல்படக்கூடிய வகையில் தன்னுடைய பால் பொருட்கள் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம். ஒரு நாளைக்கு இங்கே 1.5 மில்லியன் லிட்டர் பால் பிராசஸ் செய்யப்படுகிறது
மில்கி மிஸ்ட் நிறுவனம் 67,000 விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்கிறது இந்த விவசாயிகளுக்கு மாடு வளர்க்க தேவையான விழிப்புணர்வை வழங்குவது ,சத்தான தீவனங்களை எப்படி வழங்குவது மற்றும் விவசாயிகளுக்கான நிதி ரீதியான உதவிகளையும் மில்கி மிஸ்ட் நிறுவனம் வழங்குவதால் இந்த விவசாயிகள் தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கு பாலை வழங்கி வருகின்றனர்
கூடிய விரைவில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்ய இருக்கிறது . 2035 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஐபிஓ வெளியிடப்பட இருக்கிறது . இதில் 1785 கோடி ரூபாய் புதிதாக பங்குகளை வெளியிட்டு திரட்டப்பட இருக்கிறது. 250 கோடி ரூபாய் பிரோமோட்டர்கள் கைவசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் திரட்டப்பட இருக்கிறது . இதில் 750 கோடி கடன்களை திரும்ப செலுத்துவதற்காகவும் ,யோகர்ட், கிரீம் , சீஸ் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு 414 கோடி ரூபாயும் பயன்படுத்தப்பட இருக்கிறதாம்
2024ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 2349 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி இருக்கிறது இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகமாகும் இந்த நிறுவனத்தின் லாபம் 46 கோடியாக அதிகரித்து 137% உயர்ந்திருக்கிறது .