இன்று ரூ.33 கோடியில் வீடு... ஆனால் அன்று... 33 வருஷமாக பாம்பு, எலிகளுக்கு மத்தியில் வாழ்ந்த விஜய் பட வில்லன்!

சினிமா நடிகர்கள் சொகுசான வாழ்க்கை வாழ்வது என்னவோ உண்மைதான் என்றாலும், அதன் பின்னணியில் அவர்களின் பல வருட போராட்டங்கள் இருப்பது தெரியாது. ஒரு சிலரே பிறப்பில் இருந்தே பணக்காரர்களாக இருந்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் கடின உழைப்பால் கோடிகளில் இன்று பணம் சம்பாதிக்கின்றனர். 33 வருடங்களாக ஒரு அறை மட்டும் கொண்ட சிறிய வீட்டில், பாம்புகள் மற்றும் எலிகளுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த நடிகர் இப்போது ரூ.31 கோடி மதிப்புள்ள பங்களாவில் வசித்து வருகிறார். யார் அவர் தெரியுமா?
அவர் பாலிவுட் ஜாம்பவான் நடிகர் ஜாக்கி ஷெராஃப். ஆம், விஜயின் 'பிகில்' படத்தின் வில்லன் நடிகரேதான். 1980 - 90களில் பிரபலமான நடிகராக இந்திய சினிமாவில் வலுவான அடித்தளம் அமைத்த ஜாக்கி ஷெராஃப் பல வெற்றிப் படங்களில் நடித்தார். 'ஹீரோ', 'பரிந்தா' மற்றும் 'ரங்கீலா' போன்ற வெற்றிப் படங்களால் அவரின் வாழ்க்கை அடியோடு மாறியது. 40 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் ஜாக்கி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்..
அன்று சின்ன சின்ன வேடங்களில் நடித்து இன்று வெள்ளித்திரையில் தன்னை நிலைநிறுத்தி, இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் ஜாக்கி ஷெராஃப், தனது வாழ்க்கையின் மூன்று தசாப்தங்களை மும்பையில் ஒரு அறை மட்டுமே சிறிய வீட்டில் வசித்திருக்கிறார். மும்பையில் சால் எனப்படும் குடியிருப்பில் தான் ஜாக்கி ஷெராஃபின் வாழ்க்கை தொடங்கியது. மும்பையின் டீன் பட்டி வால்கேஷ்வர் பகுதியில் வறுமையில் வளர்ந்தார். அவரது குடும்பத்தினர் ஒரே அறையில் வசித்து வந்தனர்.
சமீபத்தில் அளித்த நேர்காணலில் பழையவற்றை மறக்காமல் தான் வந்த வழி குறித்து ஜாக்கி ஷெராஃப் மனம் திறந்தார். அதில், "அந்த நினைவுகள் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை. நான் அந்த அறையின் தரையில் தூங்குவேன். ஒருமுறை அறையின் மூலையில் ஒரு பாம்பைப் பார்த்தேன். இன்னொரு முறை ஒரு எலி என்னையும் என் அம்மாவையும் கடித்தது" என்று கூறியிருக்கிறார். இப்படி வறுமையில் வாழ்ந்த அவர் எப்படியாவது பெரிய பணக்காரராக வேண்டும் கனவு கண்டிருக்கிறார்.
ஒருகட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்காக ஜாக்கி 11 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு நின்ற அவர் செய்யாத வேலையே இல்லை என்னும் அளவுக்கு கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்திருக்கிறார். அப்படி வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் ஜாக்கியை பார்த்த நபர் சினிமாவில் ஒரு வேடத்தில் நடிக்க அழைக்க வாழ்க்கை மாறத் தொடங்கியது..
1982ல் 'சுவாமி தாதா' திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். அடுத்த வருடமே வெளியான 'ஹீரோ' என்ற பிளாக்பஸ்டர் படத்தில் அவர் நடித்த வேடம் ஹிட் அடிக்க அவரது வாழ்க்கையே தலைகீழானது. ஒரே இரவில் பாலிவுட் நட்சத்திரமாக மாறிய அவர், இன்று வரை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.
வெற்றிகரமான ஸ்டாராக மாறி, கோடிகளில் பணம் ஈட்டியபோதும் பழசை மறக்காத ஜாக்கி ஷெராஃப், சிறு வயதில் தான் வாழ்ந்த வீட்டை வாங்க முற்பட்டுள்ளார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் விற்கவில்லை எனக் கூறிவிட்டாராம். இன்று, ஜாக்கி ஷெராஃபின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் இப்போது மும்பையின் மிகவும் விலையுயர்ந்த பகுதி ஒன்றில் கடலோரத்தில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். இந்த வீட்டின் விலை 33 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஜாக்கி ஷெராஃபின் நிகர மதிப்பு சுமார் ரூ.212 கோடி என்றும் கூறப்படுகிறது.
ஜாக்கி ஷெராஃபின் மறுபக்கம் அவரின் உதவும் குணம். தன்னால் முடிந்த போதெல்லாம் ஏழைகளுக்கு உதவி செய்து வரும் அவர் தற்போது சுமார் 100 ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழைகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுவதற்காக அவர் நானாவதி மருத்துவமனையில் ஒரு அக்கவுண்ட்டை பராமரித்து வருகிறார். அவர் தனது வருமானத்தில் பாதியை ஏழைகளுக்குச் செலவிடுகிறார். தெருக் குழந்தைகள் பசியுடன் இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் தன்னை அழைக்கும்படி, அவர்களின் போன் நம்பர் கொடுத்திருக்கிறாராம். அப்படி எந்த நேரத்தில் அவர்களுக்கு உணவை ஏற்பாடு செய்து தருகிறார் அவர்.