தர்மஸ்தலா கொலைகள்: புகாரை வாபஸ் பெற புகார்தாரரை மிரட்டிய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி?

தர்மஸ்தலா கொலைகள்: புகாரை வாபஸ் பெற புகார்தாரரை மிரட்டிய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி?
சிர்சி நிலைய ஆய்வாளரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினருமான மஞ்சுநாத கவுடா மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2 மண்டை ஓடுகள் கிடைத்தது. இதில் ஒரு மண்டை ஓடு ஆண் என்பது தெரியவந்தது.

சிர்சி நிலைய ஆய்வாளரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினருமான மஞ்சுநாத கவுடா மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

இது பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. கடந்த 26-ந் தேதி கர்நாடகா பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரணவ் மொகந்தி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

புகார்தாரரை தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக 35-க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். கடந்த 29-ந்தேதி குழி தோண்டி தேடுதல் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.

5 இடங்களில் தோண்டியதில் பான் கார்டு, டெபிட் கார்டு மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 6-வது இடம் தோண்டும் பணி நடைபெற்றது. இதில் 2 மண்டை ஓடுகள் கிடைத்தது. இதில் ஒரு மண்டை ஓடு ஆண் என்பது தெரியவந்தது. இந்த எலும்புகள் மரபணு பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் தர்மஸ்தலா வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஒருவர் மீது புகார்தாரரின் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

சிர்சி நிலைய ஆய்வாளரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினருமான மஞ்சுநாத கவுடா மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புகார்தாரரின் வழக்கறிஞர், இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத கவுடா சாட்சியான தனது கட்சிக்காரரை மிரட்டி புகாரை வாபஸ் பெற வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார்.

சாட்சியை மிரட்டிய மஞ்சுநாத கவுடா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே சிறப்பு விசாரணை குழு தலைவர் பிரணவ் மொகந்தியின் பெயர் மத்திய அரசு பணிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவரை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.