ABCD சொல்லி தர ரூ.2.5 லட்சம் ஸ்கூல் கட்டணமா? எல்லை மீறி போறீங்க.. பொரிந்து தள்ளும் பெற்றோர்கள்

ABCD சொல்லி தர ரூ.2.5 லட்சம் ஸ்கூல் கட்டணமா? எல்லை மீறி போறீங்க.. பொரிந்து தள்ளும் பெற்றோர்கள்
கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது எனப் பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம்..

சென்னை: கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது எனப் பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது என்றே சொல்லலாம். பிரபல தனியார்ப் பள்ளி ஒன்றில் நர்சரி வகுப்பிற்கே ஆண்டுக்கு ரூ.2.51 லட்சம் கட்டணமாக வசூலிக்கிறார்களாம். இது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இது விவாதமாகியுள்ளது..

இந்த காலத்தில் பள்ளிப் படிப்பிற்கே பெற்றோர் லட்சக் கணக்கில் செலவிட வேண்டி இருக்கிறது. முன்பை விட இப்போது பள்ளி கட்டணம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களைக் கேட்டால் நமக்கு ஹார்ட் அட்டாக் வராத குறையாகவே அதிர்ச்சி கிடைக்கும். அந்தளவுக்குக் கட்டணங்கள் எங்கோ போய்விட்டது.

தலையே சுத்திடுச்சு

அப்படி தான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டணத்தைக் கேட்டுப் பெற்றோருக்குத் தலையே சுத்தி விட்டது. இது தொடர்பான தகவலை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், நெட்டிசன்கள் அந்த பள்ளியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தர்மா பார்ட்டி ஆஃப் இந்தியாவின் நிறுவனர் அனுராதா திவாரி என்பவர் இந்த கட்டண விவரங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்..

ஹைதராபாத்தில் உள்ள அந்த தனியார் பள்ளி ஐசிஎஸ்சி பாடமுறையை பின்பற்றுகிறது. ஹைதராபாத்தின் டாப் பள்ளிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த பள்ளியில் நர்சரி வகுப்பிற்கே ஆண்டு கட்டணமாக ரூ.2,51,000 வசூலிக்கப்படுவதாக அனுராதா திவாரி விமர்சித்துள்ளார். அவர் மேலும், ""இப்போது ஏபிசிடி படிக்கவே மாதம் ரூ.21,000ஆகிறது. இந்த பள்ளிகள் அப்படி என்னதான் சொல்லித் தருகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்..

ஏபிசிடிக்கு ரூ.2.5 லட்சமா?

மேலும், அந்த பள்ளியின் கட்டண விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி நர்ஸசி வகுப்புகளுக்கு ரூ.2.51 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கேஜி வகுப்புகளுக்கு ரூ.2.72 லட்சம் கட்டமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கான கட்டணமாக ரூ.2,91,460 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 மற்றும் 4 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,22,350 வசூலிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இது தொடர்பான போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இப்போதெல்லாம் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இது ஒரு மோசடியாகிவிட்டது. இதுபோன்ற விஷயங்களை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். பெரும்பாலானோரின் விமர்சனம் பள்ளியை விமர்சித்தே இருக்கிறது.

நெட்டிசன்கள் கருத்து

இருப்பினும், இன்னும் சிலர் வேறு விதமாகவும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஒரு நெட்டிசன், "இந்த கட்டணம் செலுத்த முடியாவிட்டால், உங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க வேண்டாம். அவ்வளவுதான் இது மிகவும் எளிமையானது" என்று கூறியுள்ளார். மற்றொரு நபர், "இந்த பள்ளியில் தான் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளதா? மற்றவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், பெற்றோர்கள் பணம் செலுத்தத் தயாராக இருப்பதால் தான் இதுபோன்ற பள்ளிகள் இவ்வளவு கட்டணத்தை வசூலிக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்...