கிராம பஞ்சாயத்துகளில் டீக்கடை, பெட்டி கடைகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை- தமிழக அரசு விளக்கம்

கிராம பஞ்சாயத்துகளில் டீக்கடை, பெட்டி கடைகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை- தமிழக அரசு விளக்கம்
கிராம பஞ்சாயத்துகளில் சிறுகுறு கடைகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது..

சென்னை: கிராம பஞ்சாயத்துகளில் சிறுகுறு கடைகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. டீக்கடை, வடை கடை உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கு உரிமம் பெறுவதை தமிழக அரசு கட்டாயமாக்கியதை அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு இத்தகைய விளக்கம் கொடுத்துள்ளதால் சிறுகுறு கடைகள் விவகாரத்தில் பழைய நிலையே தொடரும்...

தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசன்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால், அரசாணை வெளியிடப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டமாக அமலுக்கு வந்தது..

இந்த சட்டத்தின்படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் இனி அதற்குரிய கட்டணம் செலுத்தி கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும் இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...

பழைய பேப்பர்கள்-இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி-மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களும் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.30 ஆயிரம் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: நகர்ப்புறம் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழில்களை உற்பத்தி மற்றும் சேவைகள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு உட்பட்ட தொழில்களுக்கு தொழில் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் 250 ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் முதல் 2 கோடியே 50 லட்சம் வரையிலான முதலீடு உள்ள தொழில்களுக்கு 750 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயும் லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 48 தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு ஐ.பெரியசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் உண்மையில், கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெற வேண்டும் என்ற சட்டம் 1958-லேயே கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 159-ன் படி அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் உறுதிப்படுத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் "அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம் (Dangerous and Offensive Trade Licence)" என்ற பெயரில் இந்த நடைமுறை இருந்தது என்று அமைச்சர் கூறியுள்ளார். "இதனைக்கூட தெரிந்துகொள்ளாமல் ஆட்சி நடத்திவிட்டு இப்போது வழக்கம்போல் தூக்கம் கலைந்து எழுந்து வந்து பரப்புரை என்ற பெயரில் பழைய அறிக்கை அரசியலையே நடத்திக் கொண்டிருக்கிறார்" என்று ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுகுறு கடைகளுக்கு லைசன்ஸ் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து லைசன்ஸ் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. இதனால் பழைய நிலையே நீடிக்கும்..