ராமேஸ்வரம் கடலில் ஆச்சரியம்.. முள்ளம்பன்றி மாதிரியே அதிசயமான உருவம்.. பேத்தை மீன்களா? கடல் கோழியா?

ராமேஸ்வரம்: மீன்பிடிக்க சென்ற மன்னார் வளைகுடா மீனவர்களுக்கு கடலில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது... கடலில் முள்ளம் பன்றியின் தோற்றத்தை கொண்ட பேத்தை மீன்கள் அதிகமாக தென்பட்டிருக்கின்றன.. சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கம், நரிப்பையூர், மாரியூர் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஆழம் குறைந்த பகுதிகளில் காணப்படும் இந்த பேத்தை மீன்களை பற்றி தெரியுமா? இதன் குணாதிசயம் என்ன?
இந்த வினோதமான மீனை பேத்தை மீன் என்பார்கள்.. முள்ளம்பன்றி மீன் (Porcupine Fish) அல்லது கடல் கோழி அல்லது பேத்தை மீன் அல்லது பேத்தையன் மீன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது..
தன்னை ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளவே, கூரிய முட்களை உடம்பில் பெற்றிருக்கிறது.. தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தண்ணீர் அல்லது காற்றை விழுங்கி தன்னுடைய உடலை 10 மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டது..
இந்த கூர்மையான முட்கள் சாதாரண நிலையில் படுக்கை நிலையில் இருக்கும்... தன்னை பெரிதாக்கிக் கொள்ளும் போதுதான், அந்த முட்கள் நிமிர்ந்து நிற்கும். அப்போது இதை பார்ப்பதற்கு அச்சுஅசல் முள்ளம்பன்றி போலவே தோற்றமளிக்குமாம்..
ரப்பர் பந்து
சில சமயங்களில் காற்றை நிரப்பிக் கொண்டு ரப்பர் பந்து போலக் கடலிலும் மிதக்கும். ஏதாவது பறவை இதை பிடிக்க வந்தால், அப்போது தன்னை ஊதிப்பெருகுவதால் அந்த பறவை, இந்த மீனை விழுங்க முடியாமல் விட்டுவிடுமாம். தண்ணீரிலிருந்து வெளியே விட்டாலும் காற்றை இழுத்துக் கொண்டு பலூன் போன்று மாறும் தன்மை உடைய விசித்திர மீனாகும்
ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவை வாழ்கின்றன. இது மெதுவாக நீந்தக்கூடியது. ஆனால் மற்ற மீன்களை போல நீந்தாமல், வித்தியாசமாக நீந்தக்கூடியது.. எனினும் இது கடலில் நீந்தும்போது எந்த இடைஞ்சலும் ஏற்படுவதில்லை. இது ஒரு நச்சு மீன் என்பதால் இதைப் பெரும்பாலான மீன்கள் உண்பதில்லை. அதையும் மீறி சாப்பிட்டால், இது ஊதிப்பெருகி விழுங்கும் மீனின் தொண்டையில் சிக்கி அந்த மீனைக் கொன்று விடுமாம்.
கூர்மையான பற்கள்
இந்த பேத்தை மீனுக்கு மனிதர்களை போலவே பற்கள் இருக்கும்.. இதன் விலங்கியல் பெயர் டெட்ராடான் அதாவது, லத்தீன் மொழியில் 4 பற்கள் என்று அர்த்தமாம். கடினமான ஓடுகளை உடைக்க இதன் பற்கள் உதவுகிறது.
இதன் கண்கள் 360 டிகிரி சுற்றி பார்க்கும் தன்மை உடையது, குளிர் அதிகம் உள்ள பகுதிகளைவிட மற்ற அனைத்து பகுதிகளிலேயே வாழ்கின்றன.. எனினும், தான் வாழும் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது.
சிறிய ஒட்டு மீன்கள் கடல் புழுக்கள் இவற்றின் உணவாகும். நண்டு, இறால்கள் போன்ற சிறிய ரக மீன்களை விரும்பி சாப்பிடுகின்றன.
ருசியான கடல் கோழி
இந்த வகை மீனை பாம்பன் பகுதிகளில் அதிகமாக காணப்படும். எனவேதான், பாம்பன் மீன் கம்பெனிகளில், இந்த மீனின் தோல் நீக்கி சுத்தம் செய்து இதன் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய கொடிய விஷமான டெட்ராடாக்ஸின் எடுத்து விட்டு சுத்தம் செய்து, அதற்கு பிறகே உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த மீனை சாப்பிடுவதற்கு சிக்கன் போலவே இருக்குமாம்.. எனவேதான், இதனை கடல்கோழி என்கிறார்கள்.. உலகம் முழுவதும் 121 வகையான பேத்தை மீன்கள் இருப்பதாக சொல்கிறார்கள்..
சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கம், நரிப்பையூர், மாரியூர் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஆழம் குறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. இவைகள் வலைகளில் சிக்கினாலும், இந்த பேத்தை மீன்களை மீனவர்கள் கடலிலேயே விட்டு விடுகிறார்களாம்.. தற்போது மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகளவில் பேத்தை மீன்கள் காணப்படுவதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.