162 முறை வெளிநாடு சென்ற போலி துாதர்; ரூ.300 கோடி மோசடி

காஜியாபாத்: தேசியத் தலைநகர் டில்லிக்கு அருகே, உத்தர பிரதேசத்தில் போலி துாதரகம் நடத்தி கைது செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின், 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதுடன், மோசடி மன்னர்களுடன் சேர்ந்து 300 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அன்டார்டிகா கண்டத்தில் உள்ள, 6.20 லட்சம் சதுர மைல் பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதி 'வெஸ்டார்டிகா'.
'மைக்ரோநேஷன்' எனப்படும் உலக நாடுகளால் அங்கீகரிக்கப் படாத, சிறிய நிலத் தொகுப்பான, இந்த நாட்டின் பெயரில், புதுடில்லியில் துாதரகம் ஒன்று செயல்படுவதாக சமூக வலை தளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.
இதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பின் உத்தரவை தொடர்ந்து, ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
இதில், உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் ஆடம்பர பங்களாவில், வெஸ்டார்டிகா நாட்டிற்கான போலி துாதரகம் செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதை நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார்..
விசாரணை அவரிடம் உத்தர பிரதேச சிறப்பு அதிரடி போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து உ.பி., போலீசார் கூறியுள்ள தாவது:
கடந்த 2017 முதல் ஜெயின் இந்த போலி துாதரகத்தை நடத்தி வந்துள்ளார்.
வெஸ்டார்டிகா நாட்டின் கவுரவ பிரதிநிதியாக இவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னை அந்நாட்டு துாதர் எனக்கூறி வலம் வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், 162 வெளிநாட்டு பயணங்களை இவர் மேற்கொண்டுள்ளார். தற்போது சோதனை நடத்தப்பட்ட பங்களாவை ஆறு மாதங்களுக்கு முன் அவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
சந்தேகம் வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்கள், வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதாக உறுதியளித்து, தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்களை ஏமாற்றி ஜெயின் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், போலி நிறுவனங்கள் வாயிலாக பெரும் ஹவாலா நெட்வொர்க்கையும் அவர் நடத்தியது தெரியவந்துள்ளது. சர்ச்சை சாமியாரான சந்திரசாமி மற்றும் சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் கஷோகி ஆகியோருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட அவர், மோசடி மன்னன் அஹ்சன் அலி சையத்துடன் சேர்ந்து, 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்ட அஹ்சன் அலியுடன் சேர்ந்து 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் துவக்கி, பெரும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில், ஜெயினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிர்ச்சி இதற்கிடையே, ஹர்ஷ்வர்தன் ஜெயினுக்கு அளிக்கப்பட்ட பிரதிநிதி அதிகாரத்தை வெஸ்டார்டிகா ரத்து செய்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ஒரு நன்கொடையாளராக பரிச்சயமான ஹர்ஷ்வர்தன் ஜெயினை எங்கள் பிரதிநிதியாக அறிவித்தோம். ஆனால், தன்னை ஒரு துாதராக காட்டிக்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.
வெஸ்டார்டிகாவிற்கான அவரின் பிரதிநிதித்துவம் ரத்து செய்யப்படுகிறது. எங்கள் நாட்டின் விதிமுறைகளை அவர் மீறியுள்ளார்.
'இந்த விவகாரத்தில் இந்திய அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்கவும், சட்டரீதியான உதவிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்' என, கூறப்பட்டுள்ளது.