வேலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு போதை ஊசி சப்ளை செய்த 13 பேர் கைது!

வேலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு போதை ஊசி சப்ளை செய்த 13 பேர் கைது!
பள்ளிகொண்டா சுற்று வட்டார பகுதிகளில் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்

வேலூர்: பள்ளிகொண்டா சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்துவந்த 13 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, அப்துல்லாபுரம் நடு நிலை பள்ளி அருகே பள்ளி மாணவர்களை குறி வைத்து போதை நோக்கத்தில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக விரிஞ்சிபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (23), கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (20) என தெரியவந்தது. அவர் கள், வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 5 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த காவல் துறையினர் 2 கைபேசிகள், 5 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். முன்னதாக, பொய்கை அரசு பள்ளி அருகே போதை நோக்கத்தில் வலிநிவாரண மாத் திரைகள் விற்றதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பள்ளிகொண்டா அடுத்த ராமாபுரம் பகுதியில் இளைஞர்கள் சிலர் சந்தேகப்படும்படி நின்றிருந் தனர். அவர்களை, தனிப்படை காவலர்கள் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஊசிகள், போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அரசு பள்ளி மாண வர்களுக்கு விற்க முயன்றது தெரிய வந்தது. விசாரணையில், சின்னசேரி விக்னேஷ் (25), வேப்பங்கால் ஆனந்தன் (22), மணிகண்டன் (24), ராஜி (23), மல்லா (35) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 450 போதை மாத்திரைகள், ஊசிகள், கத்திகள், கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளை ஆய்வு செய்ததில் மேலும் 8 பேர் குறித்த விவரம் தெரியவந்தது. அதன்படி, கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தீபக் (35), தெலங்கானா மாநிலம் கத்துவால் மாவட்டம் ராமச்சந்திரா நகரைச் சேர்ந்த ரமேஷ் (28), குடியாத்தம் ஆர்டிஓ அலுவலக சாலையைச் சேர்ந்த ஜீவா (25), பள்ளிகொண்டா மளிகை தெருவைச் சேர்ந்த கவின் (20), வேப்பங்கால் ராமாபுரம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ் (26), பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சத்தியசீலன் (21), கீழாச்சூர் புத்தன் நகரைச் சேர்ந்த ஜியாஜ் (26), ஆகாஷ் (25) ஆகிய 8 பேரை பள்ளிகொண்டா காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், வெட்டுவானத்தைச் சேர்ந்த தீபக் கடந்த 2023-ம் ஆண்டு கஞ்சா விற்பனை, போதை மாத்திரை விற்பனையில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தெலங்கானா சென்று மருந்து விற்பனை பிரதிநிதி ரமேஷ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் சேர்ந்து போதை மாத்திரை, போதை ஊசிகளை விற்பனை செய்துள்ளனர்.

பின்னர், மருந்து ரசீது இல்லாமல் தமிழகத்துக்கு போதை மாத்திரை, போதை ஊசிகளை கடத்தி வந்து பிடிபட்டுள்ளனர். பள்ளிகொண்டா, அணைக்கட்டு, அகரம்சேரி, விரிஞ்சிபுரம், கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம் பட்டு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை, போதை ஊசிகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.பள்ளிகொண்டா சுற்று வட்டார பகுதிகளில் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.