திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

திருப்பூர்: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தூய்மைப் பணியாளரை கண்டித்தும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் கே.வி.ஆர் நகரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று இப்பள்ளியில் கல்வி பயிலும் 1-ம் வகுப்பு சிறுமி, மாலை 4 மணிக்கு கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநில இளைஞர் ஜெய் (23) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுமி, ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி தரப்பில் இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஜூலை 31) விசாரிக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வீடு திரும்பிய சிறுமி பள்ளியில் தனக்கு நடந்த விவரங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை நேற்றிரவு முற்றுகையிட்டனர். இதையடுத்து பள்ளியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெய்யை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து போக்சோ வழக்கில் ஜெய்யை கைது செய்தனர். இதனிடையே, இன்று (ஜூலை 31) காலை அப்பள்ளியில் கல்வி பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளி தரப்பில் முறையான பதில் அளிக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த கே.வி.ஆர் நகர் காவல் நிலைய போலீஸார் பெற்றோர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
அப்போது, தனியார் பள்ளி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், படிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பெற்றோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெற்றோர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் பள்ளி மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தவர்களிடம், போலீஸார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து, கூட்டத்தில் இருந்த பெற்றோர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதுமே பரபரப்பு நிலவியது.