நிலத்தை வாங்கியுள்ளோருக்கு ஹேப்பி.. இன்று சொத்து, பத்திரத்தை பதியணுமா? பதிவுத்துறை தந்த குட் நியூஸ்

சென்னை: ஆனி மாத முகூர்த்த நாட்களான இன்றும், நாளை மறுநாள் அதாவது16ம் தேதியும், பத்திர பதிவுக்கு கூடுதல் 'டோக்கன்'கள் வழங்கப்படும்' என்று தமிழக பதிவுத் துறை அறிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்புக்கு, பெயிரா எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தன்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.. பொதுமக்களின் நலன் கருதி வெளியிட்டிருந்த தங்களுடைய கோரிக்கையை ஏற்றதற்கும் நன்றியை பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது வழக்கமாகும்.. முக்கியமாக, சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அதனால்தான், முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏனென்றால், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன..
முகூர்த்த நாட்கள்
இந்நிலையில், ஆனி மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்றும், 16ம் தேதியும் முகூர்த்த நாட்களாக உள்ளன. இதையொட்டி தமிழக பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மேற்கண்ட 2 நாட்களிலும், அதிக எண்ணிக்கையில் பதிவுக்கு தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இரண்டு நாட்களிலும், வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150; வழக்கமாக, 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 வழங்கப்படும் என, பதிவுத் துறை அறிவித்துள்ளது.
பெயிரா முதல் நன்றி
முன்னதாக, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, பொதுமக்களின் நலன் கருதி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு மற்றும் எதிர்வரும் சுபமுகூர்த்த தினங்களான திங்கள் (14.07.2025) மற்றும் புதன்கிழமைகளில் (16.07.2025) கூடுதல் முன்பதிவு வில்லைகளை வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு இந்த கடிதத்தை அவர் எழுதியிருந்தார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது:
"இன்று திங்கட்கிழமை (14.07.2025) மற்றும் புதன்கிழமை (16.07.2025) சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டும் மற்றும் ஆடி மாதம் தொடங்க இருப்பதின் காரணமாகவும் மேற்கண்ட சுபமுகூர்த்த தினங்களில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கும் பொது மக்களின் எண்ணிக்கையானது வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்
.
பற்றாக்குறை நிலவுகிறது
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில் சுபமுகூர்த்த தினங்களில் ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு வில்லைகளை வழங்குவதில் பற்றாக்குறை நிலவுவதாக தெரிகிறது.
இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு வில்லைகள் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கும், மனவருத்தத்திற்கும் உள்ளாவதை தவிர்க்கும் வகையிலும், ஆடி மாதம் தொடங்க இருப்பதனை கவனத்தில் கொண்டும்,
கூடுதல் வில்லைகளை ஒதுக்க வேண்டும்
பொதுமக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து திங்கட்கிழமை (14.07.2025) மற்றும் புதன்கிழமை (16.07.2025) ஆகிய சுபமுகூர்த்த தினங்களில் அனைத்து மக்களும் ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு வில்லைகளை உயர்த்தி வழங்கிட வேண்டுகிறோம்.
இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்கள் மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் ஒருங்கே கிடைக்க பெறுவார்கள்.
நன்றி - வாழ்த்துக்கள்
ஆகவே தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர், இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுப முகூர்த்த தினங்களில் கூடுதலாக முன்பதிவு வில்லைகளை கணிசமாக உயர்த்தி வழங்கிட பதிவுத்துறை தலைவர் அவர்கள் வழிவகை செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்..
அதன்படியே, இன்றையதினம் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.. இதற்குதான் பெயிரா தன்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறது.