அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை: ஓர் உத்வேகக் கதை!

பெங்களூரு: நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் துவண்டுவிடாது மாற்றுத் துறையை தேர்வு செய்து படித்த கர்நாடக மாணவி ரிதுபர்ணாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. அவருக்கு அரசியல் கட்சியினரும் கல்வியாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா (20). இவர் மங்களூருவை அடுத்துள்ள அடியாரில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் யூ.டி.காதர் சயாத்ரி கல்லூரிக்கு சென்று ரிதுபர்ணாவுக்கு மைசூரு தலைப்பாகை, சால்வை, பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.
இதுகுறித்து ரிதுபர்ணா கூறுகையில், “எனக்கு பள்ளி நாட்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நீட் நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.
இதனால் எனது கனவுகள் கலைந்து போனதாக மனமுடைந்து போனேன். எனது பெற்றோரும் நண்பர்களும் என்னை தேற்றி, பொறியியல் படிக்குமாறு கூறினர். இதனால் சயாத்ரி கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சேர்ந்தேன். எனது கல்லூரி பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள் ஒருங்கிணைத்த அனைத்துவிதமான புதுமையான திட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றேன்.