திரையில் அவருக்கு அம்மா; நிஜத்தில் அவர் எனக்கு அப்பா;

தலைவன் தலைவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, விஜய் சேதுபதி குறித்து நடிகை தீபா பேசிய கருத்துகள் பார்வையாளர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலத்திற்கு உச்ச நடிகர்களாக இருப்பவர்களை கூட ஒரு கட்டத்தில் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், குணச்சத்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கலைஞர்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
அந்த அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை அளிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. இதற்கு, டெல்லி கணேஷ், நாசர், வடிவுக்கரசி போன்ற பலரை உதாரணமாக கூறலாம். அந்த வகையில் தற்போது நடிகை தீபாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைத்து கண்ணீர் சிந்த செய்யவும், உற்சாகமாக சிரிக்க வைக்கவும் கூடிய ஆற்றல் நடிகை தீபாவிற்கு இருக்கிறது. இதற்கு 'கடைகுட்டி சிங்கம்', 'டாக்டர்' போன்ற படங்களை உதாரணமாக கூறலாம்.
இந்நிலையில், 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் தீபாவும் நடித்துள்ளார்.
அந்த வகையில் இந்த நிகழ்வின் போது விஜய் சேதுபதி குறித்து தனது கருத்துகளை நெகிழ்ச்சியுடன் தீபா கூறினார். அப்போது, "கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் பலரும் என்னை அக்கா என்று அழைக்கின்றனர். இதற்கு இயக்குநர் பாண்டிராஜ் தான் காரணம். அதையும் விட சிறப்பான விஷயம் என்னவென்றால், 'தலைவன் தலைவி' திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன்.
ஆனால், திரைக்கு பின்னால் எனக்கு தகப்பனாக விஜய் சேதுபதி இருக்கிறார். குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று கொடுக்கும் ஆற்றல் தாய்க்கு தான் உள்ளது. அந்த வகையில், எனக்காக பல விஷயங்களை செய்து கொடுத்த விஜய் சேதுபதி எனக்கு அப்பா போன்றவர்.
நான் அவருக்கு கொஞ்சம் பெரிய சைஸ் குழந்தை போன்று என விஜய் சேதுபதியே கூறுவார். இதேபோல், இப்படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு நான் நன்றி கூற வேண்டும். ஏனெனில், இயல்பாக நடிப்பதற்கு எனக்கு நிறைய இடம் கொடுத்தார்கள். இதேபோல் பல படங்களில் யோகி பாபுவிற்கு அம்மாவாகவும் நான் நடித்துள்ளேன். அப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன" என்று நடிகை தீபா தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்வின் போது மைனா நந்தினியுடன் இணைந்து அவர் நடனமாடியது பார்வையார்களை கவர்ந்தது.