ரூ.559 செலுத்தினால் 10 லட்சம்.. வீட்டுக்கே வரும் தபால்காரர்கள்.. தூத்துக்குடி மக்களுக்கு குட்நியூஸ்

ரூ.559 செலுத்தினால் 10 லட்சம்.. வீட்டுக்கே வரும் தபால்காரர்கள்.. தூத்துக்குடி மக்களுக்கு குட்நியூஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களையும், தங்கள் வாகனங்களையும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து பயன்பெறலாம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சமும், ரூ.799 செலுத்தினால் ரூ.15 லட்சமும் கிடைக்கும்...

இன்றைக்கு தபால்களை அனுப்புவதை தாண்டி, மக்களுக்கு அஞ்சல் நிலையத்தில் வங்கி சேவையையும் தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இதனால் பலரும் தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி தங்கள் பணத்தை சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், பிஎம் கிஷான் உள்பட பல்வேறு வகையான தபால் நிலைய கணக்குகளை மக்கள் ஆரம்பித்து பணம் சேமிக்கிறார்கள்..

மொபைல் பேங்கிங்

அதேபோல் தபால் நிலையங்களில் முதியோர்களுக்கு சிறப்பு கணக்கு, குழந்தைகளுக்கு ஆர்டி திட்டம் மற்றும் மாதம் மாதம் பணம் போடும் வகையில் சிறப்பு திட்டங்கள், வங்கிகளை போல் பணம் போட்டு வேண்டிய போது எடுத்துக் கொள்ளும் வகையில் சேமிப்பு திட்டங்கள் என பல்வேறு வசதிகளை தபால் துறை செய்லபடுத்தி வருகிறது. மேலும் வங்கிகளை போல் 'மொபைல் பேங்கிங்' சேவையும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆயுள் காப்பீடு திட்டங்கள்

இந்த திட்டம் காணரமாக உங்களுடைய ஐ.பி.பி.பி. வங்கி கணக்குடன் உங்கள் தபால்நிலைய சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் ஐ.பி.பி.பி. செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், தபால்நிலைய ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.

யுபிஐ ஸ்டிக்கர் அட்டை

இதேபோல் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் யு.பி.ஐ. ஸ்டிக்கர் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களை வீடு தேடியும் தபால்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது..

ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சம்

இது குறித்து கோவில்பட்டி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 1-ந்தேதி முதல் "ஹர் கர் சுரக்சா" வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த காப்பீட்டுத் திட்டமானது விபத்துக்களால் ஏற்படும் செலவுகள், ஊனம், உயிரிழப்பு போன்றவற்றிற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் சேரலாம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சமும், ரூ.799 செலுத்தினால் ரூ.15 லட்சமும் கிடைக்கும். மேலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மருத்துவக்காப்பீடு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் காப்பீடும் வழங்குகிறது...

தபால்காரர்கள் மூலம் சேவை

இத்திட்டங்களில் சேர அனைத்து தபால் நிலையங்களிலும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் பகுதி தபால்காரர் மூலமும் இத்திட்டத்தில் சேரலாம். பொதுமக்கள் தங்களையும், தங்கள் வாகனங்களையும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து பயனடையலாம்" இவ்வாறு அந்த சேவை குறித்து அவர் தெரிவித்து உள்ளார். கோவில்பட்டி பகுதியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று காப்பீடு திட்டங்களில் சேர்ந்து பயன்பெறலாம்...