சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் நடக்கும் பிரம்மாண்டம்.. வரும் புதிய வசதிகள்..

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2025ம் ஆண்டு நிலவரப்படி 3.5 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டே சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் 2-ம் கட்ட புதிய முனையத்தில் 8 நுழைவு வாயில்கள், 60 சோதனை கவுண்டர்கள், 10 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரிமோட் போர்டிங் கேட்டுகள், 8 ஏரோபிரிட்ஜ்கள் உள்ளிட்ட வசதிகள் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இது எப்போது செயல்பாட்டிற்கு வரும் எனப்தை பார்ப்போம்...
இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்கள் என்றால் மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதரபாத், கொல்கத்தா ஆகியவற்றை சொல்லாம். இதில் மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக இருந்தது. ஆனால் விமான நிலையம் சிறிய அளவில் உள்ளதால் நிறைய விமானங்களை இயக்க முடியாத நிலை இருக்கிறது. சென்னையுடன் ஒப்பிடும் போது, மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் போன்ற விமான நிலையங்கள் தற்போது பெரிய அளவில் உள்ளன...
பிஸியான விமான நிலையம்
தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் அதிக பிஸியான விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. பெங்களூர், ஹைதரபாத் உள்பட இந்தியாவின் பெருநகரங்களை ஒப்பிடும் போது, நகருக்குள்ளயே இருக்கும் விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருக்கிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தான் தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள். ஆந்திரா, புதுச்சேரி மக்களும் சென்னை விமான நிலையத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்...
சென்னை மாநகரம்
சென்னை மாநகரமும் வளர்ந்தது போல், கடந்த 20 ஆண்டுகளில், பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்தது. அதன் காரணமாக விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு, பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து, அப்போது 2025-ல், 3.5 கோடியை நெருங்கி உள்ளது. விமானங்களும் மிக அதிக அளவில் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ் போல் எந்த நேரமும் விமானம் வருவதும், போவதுமாக இருக்கிறது. தற்போது உள்ள நிலவரப்படி சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது ...
விரிவுப்படுத்தப்பட்ட முனையம்
எனவே இதனை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி மதிப்பீட்டில், 2.36 லட்சம் சதுர மீட்டரில், விரிவுப்படுத்தும் விதமாக பணிகளை 2 கட்டங்களாக கட்டி முடிக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. முதற்கட்டமாக 1.49 லட்சம் சதுர மீட்டரில், ரூ.1,260 கோடியிலும், 2-வது கட்டமாக 86,135 சதுர மீட்டரில், 1,207 கோடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்தார்..
2வது முனையம்
தற்போது சென்னை விமான நிலையத்தில் 3-வது முனைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 2-வது கட்ட கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த 2-ம் கட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து, 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 2-ம் கட்ட புதிய முனையத்தில் 8 நுழைவு வாயில்கள், 60 சோதனை கவுண்டர்கள், 10 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரிமோட் போர்டிங் கேட்டுகள், 8 ஏரோபிரிட்ஜ்கள் உள்ளிட்ட வசதிகள் அதிநவீன முறையில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகளை இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார் தலைமையில் மூத்த உயர் அதிகாரிகள் குழுவினர் கடந்த ஜூலை 22ம் தேதி ஆய்வு செய்தனர்..
2026ல் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னை விமான நிலையத்தில் தற்போது 1,2, மற்றும் 4 ஆகிய 3 முனையங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், 2026 மார்ச் மாதத்திற்கு பின்பு, புதிய முனையமான 3 செயல்பாட்டிற்கு வந்த பின்பு, சென்னை விமான நிலையத்தில், 4 முனையங்கள் இருக்கும் என்றும் தினசரி விமானங்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன..