செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ

செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.
செஞ்சி கோட்டையில் கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம் போன்றவை உண்டு. கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும் கல்யாண மண்டபம்தான் முக்கிய கவன ஈர்ப்பு மையம்.
அந்தக் கால சென்னை- பெங்களூரு வணிகத்தை கண்காணித்து ஒழுங்குப்படுத்த பொருத்தமான இடத்தில் செஞ்சி கோட்டை அமைந்துள்ளது. சுமார் 1,200 ஏக்கரில் மூன்று சிறு மலைகளை உள்ளடக்கி சுற்றிலும் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களாலும், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், உயரமான மதில்களுடன் செஞ்சி கோட்டை கட்டப்பட்டுள்ளது
செஞ்சி கோட்டை மராட்டிய சிவாஜிக்கு முன்பும் பின்னும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளதற்கு காரணம் தென் இந்திய மலைக் கோட்டைகளில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டையாக செஞ்சி கோட்டை அமைந்திருப்பதுதான். கோட்டையை யார் கட்டினர் என்றதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.
செஞ்சி கோட்டையை பல்வேறு காலகட்டங்களில் குறும்பர்கள், ஹோய்சலர்கள், விஜயநகர மன்னர்கள் ஆண்டுள்ளனர். தொடர்ந்து நாயக்க மன்னர்கள், முகலாயர்கள் கட்டுப்பாட்டிற்குள் செஞ்சி கோட்டை வந்தது.
மராட்டிய சிவாஜி 1678-இல் செஞ்சி கோட்டையை தன் வசப்படுத்தி கோட்டையை பலப்படுத்தினார். கோட்டையின் பாதுகாப்புச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டன. காவல் கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டன. கோட்டையைச் சுற்றிலும் பிரம்மாண்டமான அகழி ஏற்படுத்தப்பட்டது.
ராணுவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களுக்கேற்ப, ஐரோப்பிய பொறியாளர்களே வியக்கும் வகையில் செஞ்சி கோட்டை கட்டுமானங்கள் இருந்தன. இதனால், செஞ்சி கோட்டையை அசைக்க முடியாத கோட்டையாக மாற்றுவதில் சிவாஜியின் போர் அறிவு பயன்பட்டுள்ளது.
மராட்டிய ஆட்சி முழுமையாக செஞ்சி பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. புதுச்சேரி, கூனிமேடு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் சிவாஜியின் வசம் வந்தன. சிவாஜிக்குப் பிறகு சிவாஜியின் இரண்டாம் மகன் ராஜாராம் செஞ்சியை ஆண்டார்.
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலூன்ற கடலூர், தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் வணிகம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் செஞ்சி அரசர் ராஜாராமும், கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை ஆளுநர் எலிகு யேலும் 1690-இல் ஒப்பந்தம் மேற்கொண்டனர். இதன் மூலம் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டு அரசின் சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றவும், நாணயங்கள் அச்சிட்டுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டன.
1698-இல் மொகலாயர்கள் செஞ்சி கோட்டையை மீட்டனர். மொகலாயர்களின் பிரதிநிதியாக ஸ்வரூப் சிங் 1698-இல் செஞ்சி கோட்டையை ஆண்டார். இவர் இறந்ததும் அவர் மகன் ராஜா தேசிங் மொகலாயர்களுக்குக் கட்டுப்படாமல், ஆட்சி செய்ய மொகலாயர்கள் நடத்திய யுத்தத்தில் ராஜா தேசிங் கொல்லப்படுகிறார்.
மொகலாயர்களுக்குப் பிறகு செஞ்சி கோட்டை பிரெஞ்சு ராணுவம், ஆங்கில ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்கு சென்னையை தலைநகராக்கியதால், செஞ்சி கோட்டை தனது முக்கியத்துவத்தை இழந்ததாக சொல்லப்படுகிறது.