சென்னை பெருங்குடி சதுப்பு நிலத்தில் சத்தமில்லாமல் நடந்த பெரிய ஆக்கிரமிப்பு.. மாநகராட்சி அதிரடி..

சென்னை: பெருங்குடி சதுப்பு நிலத்தில் 250-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக் காலங்களில் வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது என கவுன்சிலரும் மண்டலக்குழு தலைவருமா ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியிருந்தார்.இதற்கு பதல் அளித்த சென்னை மேயர் பிரியா சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுத்து அவை அகற்றப்படும் என்றார். இதேபோல் சென்னையில் வளர்ப்பு நாய்களை சாலையில் விட்டுச்சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்..
சென்னையில் தெருநாய் தொல்லையும், ஆக்கிரமிப்பும் பெரிய பிரச்சனைகளாக உள்ளன. இதுபற்றி நேற்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பினார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று ஜூலை மாதத்துக்கான மாதாந்திர மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்...
கவுன்சிலர் கேள்வி
இந்த கூட்டத்தில் மதிமுகவைச் சேர்ந்த 139-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி பேசுகையில், சென்னையில் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் தொடக்கத்தில் அதனை நன்றாக பார்த்து பார்த்து பராமரிக்கிறார்கள். ஆனால் சிறிது நாட்கள் கழித்து பராமரிக்க முடியாமல் சாலையில் விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவது நடக்கிறது. இதுபோன்ற செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்..
தெருநாய்கள் பிரச்சனை
இதற்கு பதில் அளித்த சென்னை மேயர் பிரியா, சென்னையில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு 'சிப்' பொருத்தும் பணி நடந்து வருகீறது. இதன்மூலம் வளர்ப்பு நாய்கள் அதற்கான பிரத்யேக செயலி மூலம் கண்காணிக்கப்படும். உரிமையாளர்கள் தங்களது நாயை சாலையில் விட்டு செல்வது கண்டறியப்படும்போது அவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றார்...
குடிசைகள் ஆக்கிரமிப்பு
தொடர்ந்து சென்னையின் 184 வார்டு கவுன்சிலரும், மண்டலக்குழு தலைவருமான ரவிச்சந்திரன் பேசுகையில், சென்னை பெருங்குடி சதுப்பு நிலம் வெள்ள தடுப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால், சதுப்பு நிலத்தில் கட்டிட கழிவுகளை கொட்டிவிட்டு செல்வது தொடர்கிறது. இப்போது அங்கு 250-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக் காலங்களில் வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்...
பெருங்குடி சதுப்பு நிலம்
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, "நீங்கள் குறிப்பிடும் சதுப்பு நிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. அவர்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும். எனவே, அந்த பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுத்து அவை உறுதியாக அகற்றப்படும் என்று கூறினார்.