சென்னை ஐசிஎஃப்-ல் நடந்த அதிசயம்.. இந்தியாவிலேயே முதல் முறை இதுதான்! குவியும் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி, இயக்கி சென்னை ஐசிஎஃப் ரயில்வே புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் பசுமை ரயிலை உருவாக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே, முக்கியமான மைல்கல்லை எட்டியிருக்கிறது. சென்னை ஐசிஎஃப் சாதனைக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பாராட்டு தெரிவித்திருக்கிறார்...
ஹைட்ரஜன் எரிபொருள் என்பது புதுப்பிக்கத்தக்க, அதே சமயம் மாசு இல்லாத எரிபொருளாக பார்க்கப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்தான் தற்போது ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை இயக்கி வருகின்றன. அந்த வகையில் இந்தியா, ஹைட்ரஜன் ரயிலை இயக்கி சோதனை செய்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது..
டீசல், மின்சார ரயில்களை காட்டிலும் ஹைட்ரஜன் ரயில்கள் மிகவும் அதிக செயல்திறனை கொண்டிருக்கும். இந்தியாவில் ரயில்கள் இரண்டு வகைகளில் இயக்கப்படுகின்றன. ஒன்று மின்சார ரயில், இன்னொன்று டீசல் என்ஜின் ரயில். மின்கம்பிகள் இருக்கும் இடங்களில் மின்சார ரயில்கள் இயங்கும். இது இல்லாத இடங்களில் டீசல் என்ஜின் ரயில்கள் இயங்கும். டீசலை எரிப்பதன் மூலம் என்ஜினுக்கு பவர் கொடுத்து ரயிலை இயக்க முடியும். இதுதான் கான்செப்ட்...
ஏறத்தாழ இதே முறையில்தான் ஹைட்ரஜன் ரயில்கள் இயங்குகின்றன. ஆனால் ஹைட்ரஜன் ரயில்களில் நேரடியாக ஹைட்ரஜனை எரிப்பதில்லை. மாறாக இந்த ரயில்களில் ஹைட்ரஜன் செல்கள் இருக்கும். இது ஹைட்ரஜனையும், நீரையும் வேதியல் வினைக்கு உட்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும். இந்த மின்சாரம் மூலம் ரயில்கள் இயங்கும். டீசல் என்ஜினில் ரயில்கள் எந்த அளவுக்கு வேகத்துடன் செல்கிறதோ, அதே வேகத்தில் ரயில் இயங்க ஹைட்ரஜனும் பவர் கொடுக்கும்.
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலில் இரைச்சல் அதிகமாக இருக்காது. இதிலிருந்து புகையோ, வேறு எந்த கழிவுகளோ வெளியேறாது. எனவே புவி வெப்பமயமாதல் மற்றும் மாசு குறையும். மட்டுமல்லாது இப்போதிருக்கும் தண்டவாளங்களிலேயே ஹைட்ரஜன் ரயில்களை இயக்க முடியும். சிறிய மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். பெரிய அளவுக்கு செலவு இழுக்காது. ஆனால் இதில் சில சவால்களும் இருக்கின்றன..
ஹைட்ரஜன் அதிக அழுத்தத்தில், குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். மட்டுமல்லாது இது எரியும் தன்மை அதிகம் கொண்டது. எனவே கொஞ்சம் ஆபத்தானதும் கூட. இருப்பினும் இந்த சவால்களையெல்லாம் வெற்றிகரமாக கடந்து ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை உருவாக்கி சென்னை ஐசிஎஃப் சாதனை படைத்திருக்கிறது.
இந்த சாதனைக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பாராட்டு தெரிவித்திருக்கிறார். "இந்தியாவிலே முதல் முறையாக சென்னை ஐசிஎஃப்-ல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா இடம் பெறும்...