மனித மலத்தை பில்லியன் டொலருக்கு வாங்கும் மைக்ரோசாப்ட் - ஏன் தெரியுமா?

மனித கழிவை வாங்கும் மைக்ரோசாப்ட்
இது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட வால்ட் டீப்(Vaulted Deep) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் 12 ஆண்டுகளுக்கு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
மைக்ரோசாப்ட், உலகளவில் கார்பன் தடத்தை குறைப்பதை இலக்காக வைத்துள்ளது. ஏனெனில் அதன் AI செயல்பாடுகள் ஆற்றல் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வை கணிசமாக அதிகரிக்கின்றன.
2020 முதல் 2024 வரை, நிறுவனம் 75.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு(CO2) சமமான அளவை வெளியிட்டுள்ளது.
கார்பன் டை ஆக்சைடு அகற்றுவதற்கான சராசரி செலவு, ஒரு டன்னுக்கு சுமார் 350 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
என்ன திட்டம்?
இந்த திட்டத்தின் படி, மனித கழிவுகள், உரம் போன்றவற்றை வாங்கி, கூட்டாக bioslurry என்று அழைக்கப்படும் அவற்றை, சுமார் நிலத்திற்கு கீழே 5,000 அடி ஆழத்தில் செலுத்த உள்ளது.
இதன் மூலம், பூமியிலிருந்து 4.9 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடை அகற்ற திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு நிலத்தடியில் சேமித்து வைப்பது இயற்கை சிதைவைத் தடுக்கும்.
இல்லையெனில் மீத்தேன் போன்ற சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும். புவி வெப்பமடைதலில், மீத்தேன் CO2 ஐ விட குறைந்தது 4 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.
இதனை நிலத்தின் அடியில் நிரந்தரமாகப் புதைப்பதன் மூலம், நிலத்தின் மேல்மட்டத்தில் பிற சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வால்ட் டீப் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா ரீச்செல்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் ஏற்கனவே 83 மில்லியன் டன்களுக்கும் அதிகமான மதிப்புள்ள கார்பன் நீக்கியுள்ளதாகவும், அவற்றில் 59 மில்லியன் இந்த ஆண்டு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள், இதுவரை மைக்ரோசாப்ட் வெளியிட்ட அனைத்து உமிழ்வுகளையும் அகற்ற உறுதி எடுத்துள்ளது..