சீன செயலி மூலம் ரூ.900 கோடி முதலீடு; டில்லியை சேர்ந்த நபர் சிக்கினார்

புதுடில்லி : சீனாவை சேர்ந்த நபர்களால் இயக்கப்படும் முதலீடு செயலி வாயிலாக, 900 கோடி ரூபாயை முதலீடாக பெற்று மோசடி செய்ததாக டில்லியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
நம் அண்டை நாடான சீனாவை சேர்ந்த சிலர் நம் நாட்டை சேர்ந்த சிலருடன் இணைந்து, 'லோக்ஸாம்' என்ற போலி முதலீட்டு செயலியை உருவாக்கினர்.
பண மோசடி
இதில் செலுத்தப்படும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி முதலீடுகளை பெற்றனர்.
இது தொடர்பாக, 2022ல் தெலுங்கானாவின் ஹைதராபாத் சைபர் போலீசில் வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
விசாரணையில் இந்த பணம் சீனாவை சேர்ந்த ஜேக் என்பவரின் அறிவுறுத்தலின் படி நம் நாட்டை சேர்ந்த நபர், 'ஷின்டாய் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற போலி நிறுவனம் பெயரில், 38 வங்கி கணக்குகள் துவங்கி பணம் பெற்றுள்ளார்.
இந்த பணத்தை டில்லியை சேர்ந்த ரோகித் விஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் உதவியுடன் டாலர் மற்றும் திர்ஹாம் போன்ற வெளிநாட்டு பணமாக மாற்றப்பட்டது
இதற்கு ரஞ்சன் மணி, கே.டி.எஸ்., பாரக்ஸ் போன்ற வெளிநாட்டு பணம் மாற்றும் போலி நிறுவனங்கள் உதவியது தெரியவந்தது.
தேடுதல் வேட்டை
இவ்வாறு ஏழு மாதங்களில் மட்டும் ரோகித் கட்டுப்பாட்டில் செயல்படும் இரு நிறுவனங்கள் வாயிலாக 903 கோடி ரூபாயை சீன நபர்களுக்கு வெளிநாட்டு பணமாக மாற்றி கொடுத்துள்ளது.
இதையடுத்து டில்லியில் உள்ள ரோகித் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தி அங்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.