இந்தியர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்!

புதுடில்லி: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியா, தாய்லாந்து உட்பட 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 77வது இடத்திற்கு முன்னேறி உள்ளது...
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் தயாரித்துள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல், இந்தோனேசியா, மாலத்தீவுகள், மலேசியா, தாய்லாந்து உட்பட 59 நாடுகளுக்கு செல்லலாம். கடந்தாண்டு, 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். தற்போது, 57 நாடுகளில் இருந்து 59 நாடாக அதிகரித்துள்ளது.
தரவரிசை பட்டியலில், இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்தது. விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன...
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளன. டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்போர், 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகியவை 4வது இடத்தையும், நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து 5வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆஸ்திரேலியா, செக் குடியரசு, ஹங்கேரி, மால்டா மற்றும் போலந்து ஆகியவை 7வது இடத்தில் உள்ளன. அதே நேரத்தில் கனடா, எஸ்டோனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 8வது இடத்தில் உள்ளன.
ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜூர்க் ஸ்டெபென் கூறியதாவது: உங்கள் பாஸ்போர்ட் இனி ஒரு பயண ஆவணம் மட்டுமல்ல, இது உங்கள் நாட்டின் ராஜதந்திர செல்வாக்கு மற்றும் சர்வதேச உறவுகளின் பிரதிபலிப்பாகும்.
வளர்ந்து வரும் சமத்துவமின்மை மற்றும் பெருகிவரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் சகாப்தத்தில், குடியுரிமை திட்டமிடல் எப்போதையும் விட மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.