அரசு பஸ்சில் டிக்கெட் செக்கிங் செய்த சிறுவன்! ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் ஏடா கூடமாக பதில் சொன்ன கண்டக்டர்

சென்னை: அரசு பேருந்து பயணிகளிடம் டிக்கெட் செக்கிங் பணியில் டீ ஷர்ட் அணிந்தபடி சிறுவன் ஒருவர் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இது பற்றி பயணி ஒருவர், டிக்கெட் செக்கிங்கில் ஈடுபடும் சிறுவனிடம் கேட்ட போது அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. அருகில் இருந்த கண்டக்டரும் சரியான பதிலளிக்காமல் அலட்சியம் செய்துள்ளார்.
அரசு பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிப்பதை உறுதி செய்வதற்காக ஆங்காங்கே திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபடுவதை பார்த்து இருக்க முடியும். சென்னை போன்ற நகரங்களில் எந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறார்கள் என்று கணிக்க முடியாத அளவு திடீரெனெ பேருந்தில் ஏறி அனைத்து பயணிகளிடம் டிக்கெட் வாங்கி செக் செய்வார்கள்.
டிக்கெட் செக்கிங் பணியில் சிறுவன்
தொலை தூர பேருந்துகளில் கூட இரவு நேரத்தில் முக்கியமான பாயிண்ட்களில் இப்படி டிக்கெட் சோதனையில் டிக்கெட் பரிசோதர்கள் ஈடுபட்டு இருப்பார்கள். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் சீனியர்களுக்கு இந்த டிக்கெட் பரிசோதகர் பணி ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் பயணிகளிடம் சுமார் சிறுவன் ஒருவர் டிக்கெட் செக்கிங்கில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன
.ஏடா கூடமாக பதிலளித்த கண்டக்டர்
பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகளிடம் வரிசையாக டிக்கெட்டை கேட்டு, டிக்கெட் செக்கிங் பணியில் அந்த சிறுவன் ஈடுபட்டுகொண்டு இருந்தார். இதைக் கவனித்த பயணி ஒருவர், நீங்கள் ஏன் டிக்கெட் செக் செய்கிறீர்களே? யார் நீங்க? என்று சிறுவனிடம் கேட்க.. அதற்கு நீங்க ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க என்று சிறுவன் பதிலளித்தார்.
அப்போது பக்கத்தில் நின்ற அரசுபஸ் கண்டக்டரோ, இவர் எனக்கும் மேல் உள்ள பெரிய அதிகாரி.. ஏஇ என்று பயணியிடம் ஏடா கூடமாக பதிலளித்தார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்
நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
தனியார் பேருந்துககளுக்கு செக்கிங் செய்தால் கூட அந்த பேருந்து சார்பாக ஒருவேளை பணியில் ஈடுபட்டு இருப்பார் என கருதலாம். ஆனால் அரசு பேருந்துகளில் டிக்கெட் செக்கிங் செய்யும் பணிக்கு இந்த சிறுவனுக்கு யார் பணி ஒதுக்கீடு செய்து கொடுத்தது? ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என்றெல்லாம் கேட்டு நெட்டிசன்கள் போக்குவரத்துதுறை அமைச்சர் மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்துடன் தொடர்புடைய எக்ஸ் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டு இருந்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் விளக்கம்
இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த நிகழ்வு ஆத்தூர் பேருந்து நிலையத்தில் 14.07.2025 அன்று நடைபெற்றது இந்த கணொளியில் இருப்பவர் தொழில் பழகுநர் பயிற்சியில் இருப்பவர் ஆவார்
தொழிற்பயிற்சி பழகுநர்
இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரை இப்பணியில் ஈடுபடுத்திய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவ்டிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்து போக்குவரத்து கழகங்களில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களில் சேர்க்கப்படுவது பழக்கம். இப்படியாக தொழிற்பயிற்சி பழகுநராக சேர்ந்த நபரையே டிக்கெட் செக்கிங்கு ஈடுபடுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது