77,600% உயர்ந்த ஸ்மிருதி இரானி சம்பளம்.. மாஜி மத்திய அமைச்சருக்கு புதிய சீரியலில் சம்பளம் எவ்வளவு

டெல்லி: மாஜி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அரசியலில் நுழையும் முன்பு சீரியலில் நடித்து பிரபலமானவர். இப்போது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சின்னத்திரைக்குத் திரும்ப இருக்கிறார். புகழ்பெற்ற 'க்யூங்கி சாஸ் பி கபி பகு தி' தொடரின் இரண்டாவது சீசனில் துளசி விரானி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே கேரக்டரில் நடித்த போது அவர் ஒரு எபிசோடுக்கு ரூ.1,800 மட்டுமே சம்பளமாகப் பெற்றார். இப்போது அவரது சம்பளம் குறித்த விவரங்களை நாம் பார்க்கலாம்
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவரான ஸ்மிருதி இரானி மீண்டும் இந்தி சின்னதிரையில் களமிறங்குகிறார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக 'க்யூங்கி சாஸ் பி கபி பகு தி'(Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) என்ற சீரியலில் அவர் துளரி விரானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஸ்மிருதி இரானி
இந்தியில் மெகா ஹிட் அடித்த இந்த சீரியல் தான் அவரை பல கோடி மக்களிடம் கொண்டு சென்றது. சுமார் 8 ஆண்டுகள் அதாவது 2008 வரை அவர் அந்த சீரியலில் நடித்திருந்தார். அதன் பிறகு அரசியல், தேர்தல், அமைச்சர் என பிஸியாகிவிட்டார். இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் அவர் சீரியலில் நடிக்க ஆரம்பிக்கிறார்
சம்பளம் எவ்வளவு!
'க்யூங்கி சாஸ் பி கபி பகு தி' தொடரின் 2வது சீசனில் அதே துளசி விரானியாக நடிக்கிறார். இந்த 2வது சீன் ஜூலை 29ம் தேதி முதல் இரவு 10:30 மணிக்கு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் அவரது சம்பளம் தான் பலருக்கும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. இரண்டாவது சீசனில் நடிக்க ஸ்மிருதி இரானிக்கு ஒரு எபிசோட்டிற்கு ரூ.14 லட்சம் சம்பளம் தரப்படுவதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் சம்பள விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை
.அதே சீரியல் 2000ஆம் ஆண்டில் முதன்முதலில் ஒலிபரப்பானபோது, ஸ்மிருதி இரானி ஒரு எபிசோடுக்கு ரூ.1,800 மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தான் அவர் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கியிருந்தார். இதனால் அவருக்கு ரூ.1800 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. இப்போது அவரது சம்பளம் ரூ.14 லட்சமாக இருக்கிறது. அதாவது அவரது சம்பளம் சுமார் 77,600% அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "துளசி விரானியாக ஸ்மிருதி இரானியின் ஃபர்ஸ்ட் லுக்.. இன்னும் உங்களால் நம்ப முடியவில்லையா? 25 வருடங்களுக்குப் பிறகு, துளசி விரானி ஒரு புதிய கதையுடன் வருகிறார்! க்யூங்கி சாஸ் பி கபி பகு தி மீண்டும் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பகுதியாக மாறவுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இரானி அரசியல்
ஸ்மிருதி இரானி கடந்த 2011 முதல் 2019 வரை ராஜ்யசபாவில் எம்பியாக இருந்தார். 2019ம் ஆண்டில் அவர் லோக்சபா தேர்தலில் களமிறங்கினார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை வீழ்த்தியிருந்தார். அதேநேரம் 2024 லோக்சபா தேர்தலில் அவர் கிஷோரி லால் சர்மாவிடம் சுமார் 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்
.